வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (08:25 IST)

இப்படியும் கடத்தல் கும்பலை பிடிக்கலாமோ? – சுத்தியலோடு பாயந்த கிறிஸ்துமஸ் தாத்தா!

பெரு நாட்டில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க போலீஸார் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் போதை மருந்து மாஃபியா உள்ள நிலையில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இது அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் போதை மருந்து கடத்தல் கும்பலை பிடிக்க போலீஸாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் லத்தீன் அமெரிக்க நாடான பெருவில் உள்ள லிமாவில் போதை மருந்து கடத்தல் வீட்டில் வைத்து செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. நேரடியாக போலீஸ் உடுப்பில் சென்றால் அவர்கள் தப்பி விட கூடும் என்பதால் வித்தியாசமான திட்டத்தை போட்டுள்ளனர் லிமா போலீஸார்.

அதன்படி தற்போது கிறிஸ்துமஸ் நெருங்கி வருவதால் கிறிஸ்துமஸ் தாத்தா போல வேடமிட்ட போலீஸார் அப்பகுதிகளில் பரிசுகள் வழங்குவது போல சென்று நோட்டமிட்டுள்ளனர். அப்போது ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தெரிந்துள்ளது. உடனே கையில் கொண்டு வந்திருந்த சுத்தியலோடு பாய்ந்து சென்ற போலீஸ் கிறிஸ்துமஸ் தாத்தா கதவை உடைத்து உள்ளே செல்ல மற்ற கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் அங்கிருந்த போதை பொருள் கடத்தல் கும்பலை மடக்கி பிடித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.