திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sasikala

ஒலிம்பிக் ஹாக்கி காலிறுதி: ஆஸ்திரேலிய அரணை சிதறடித்த இந்திய வீராங்கனைகள்

ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி முதல் முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது.


டோக்கியோ ஒலிம்பிக்கின் காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
 
22 - ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் குர்ஜித் கவுர் ஆஸ்திரேலிய கோல் கீப்பர் ரேச்சலை ஏமாற்றி கோல் அடித்தார். அதன் பிறகு ஆஸ்திரேலிய அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.
 
டோக்யோ ஒலிம்பிக்கின் லீக் போட்டிகளின் முதல் மூன்று ஆட்டங்களிலும் தோல்வி அடைந்திருந்த இந்திய பெண்கள் அணி அடுத்தடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது.
 
மற்றொரு புறம் ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றின் அனைத்துப் போட்டிகளிலும் வென்றி பெற்று முழு நம்பிக்கையுடன் காலிறுதிக்குப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது.
 
இப்போது தகுதி நிலையில் 4 இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணியை 10-ஆம் இடத்தில் உள்ள இந்திய அணி வீழ்த்தியிருக்கிறது.
 
ஆஸ்திரேலிய தாக்குதலை முறியடித்த இந்திய அரண்
 
இந்தப் போட்டியின்போது இரண்டாவது நிமிடத்திலேயே ஆஸ்திரேலியாவுக்குக் கோல் அடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அம்ரோஸியா மலோன் அருமையாகப் பந்தை வாங்கி கோலை நோக்கி அடித்தார். ஆனால் இந்திய வீராங்கனைகள் அதைச் சிறப்பாகத் தடுத்து ஆபத்தில் இருந்து தப்பினர்.
 
அதேபோல் 9-ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சலீமா, வந்தனா கடாரியா ஆகியோர் கடத்தி வந்த பந்தை ராணி ராம்பால் கோலை நோக்கித் திருப்பியபோது அது கம்பத்தில் பட்டு திரும்பிவிட்டது. இதனால் முதல் கால்பகுதி நேரத்தில் இரு அணியாலும் கோல் அடிக்க இயலவில்லை.
 
இரண்டாவது கால்பகுதியின்போது 20-ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதை எதிர்த்து இந்தியா முறையீடு செய்தது. ஆயினும் ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாகவே முடிவு வழங்கப்பட்டது.
 
இருப்பினும் ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் பெனால்டி கார்னர் உத்தியை இந்திய கோல் கீப்பர் சவிதா புனியா அற்புதமாகச் செயல்பட்டு முறியடித்தார். ஆஸ்திரேலிய கோட்டையை உடைத்த இந்திய வீராங்கனைகள்
 
அதன் பிறகு இரண்டே நிமிடங்கள் ஆகியிருந்தபோது இந்திய அணியில் குர்ஜித் கவுர் சிறப்பான கோலை அடித்தார். டோக்யோ ஒலிம்பிக்கில் அவர் அடித்திருக்கும் முதல் கோல் இதுவாகும்.
 
அதன் பிறகு ஆஸ்திரேலிய அணி எவ்வளவோ முயன்றும் அந்த அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் ஒலிம்பிக் பதக்கத்துக்கு அருகே முதல் முறையாகச் சென்றிருக்கிறது இந்திய பெண்கள் ஹாக்கி அணி.
 
போட்டின்போது இரண்டு முறை இந்திய வீராங்கனைகளுக்கு கிரீன்கார்டு வழங்கப்பட்டது. அதனால் தலா இரண்டு நிமிடங்களுக்கு 10 பேருடன் இந்திய அணி ஆட வேண்டியிருந்தது.
 
25-ஆவது நிமிடத்தில் மோனிகா மாலிக்கும் 54-ஆவது நிமிடத்தில் நிக்கி பிரதானும் கிரீன் கார்டு மூலம் வெளியேற்றப்பட்டனர். கிரீன்கார்டு பெற்றால் இரண்டு நிமிடங்களுக்கு ஆட முடியாது.
 
அந்த நேரத்திலும் ஆஸ்திரேலிய அணியின் தாக்குதலை இந்திய வீராங்கனைகள் சிறப்பாகத் தடுத்தனர்.
 
வரலாற்றுச் சாதனை
 
ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய மகளிர் அணி அரையிறுதிப் போட்டிக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.
 
1980-ஆம் ஆண்டில் இருந்துதான் பெண்களுக்கான ஹாக்கி போட்டி ஒலிம்பிக்கில் ஆடப்பட்டு வருகிறது. முதல் போட்டி மாஸ்கோவில் நடந்தபோது மொத்தமே ஆறு அணிகள்தான் பங்கேற்றன. அதில் இந்திய அணிக்கு நான்காவது இடம் கிடைத்தது. அதன் பிறகு 1982-ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய பெண்கள் அணிக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றது.
 
2016-ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணி, லீக் சுற்றிலேயே வெளியேறியது. இப்போது முதல் முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்திருக்கிறது. அடுத்த போட்டியில் அர்ஜென்டினா அணியுடன் இந்திய வீராங்கனைகள் மோத இருக்கிறார்கள்.