செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (15:32 IST)

வடகொரியாவில் கடும் உணவுப் பஞ்சம்: நெருக்கடியில் கிம்

வடகொரியாவில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு ராணுவத்துக்கு அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு. 

 
வெள்ளத்துக்குப் பிறகு 1,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன மற்றும் சுமார் 5,000 பேர் வெளியேற்றப்பட்டனர் என்று அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது. ஏற்கெனவே வடகொரியா பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. உணவுப் பற்றாக்குறையால் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் கனமழையும் சேர்ந்திருக்கிறது.
 
கடந்த ஜூன் மாதத்தில் நாடு உணவு தொடர்பாக "பதற்றமான" சூழல் ஏற்பட்டதாக கிம் ஜோங் உன் கூறியிருந்தார். கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக வடகொரியாவில் தானிய உற்பத்தி இலக்குகள் தவறிப்போயின. அதனால் இந்த ஆண்டு அறுவடையை நாடு நம்பியிருந்தது.
 
வீடுகள் அவற்றின் கூரைகள் வரை வெள்ளத்தில் மூழ்கியிருப்பதையும், கிழக்கு மாகாணமான தெற்கு ஹம்யோங்கில் உள்ள சேதமடைந்த பாலங்கள் மற்றும் இரயில் பாதைகளையும் அரசுத் தொலைக்காட்சி காட்டியது.
 
நூற்றுக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் முழ்கியிருப்பதாக AFP செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. பேரழிவிலிருந்து மீள்வது குறித்து விவாதிக்க ஆளும் தொழிலாளர் கட்சியின் ராணுவ ஆணையம் வியாழக்கிழமை ஒரு கூட்டத்தை நடத்தியதாக அதிகாரப்பூர்வ கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இந்தக் கூட்டத்தில் கிம் ஜோங் உன் கலந்து கொள்ளவில்லை, ஆனால் மக்களுக்குத் தேவையான பொருள்களை ராணுவம் இந்தப் பகுதியில் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அவர் கூறியனுப்பி இருந்தார் என்று கேசிஎன்ஏ கூறியது. ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை வடகொரியாவில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
அணு ஆயுதச் சோதனைகளின் காரணமாக சர்வதேச அளவில் வடகொரியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த தனது எல்லைகளை வடகொரியா மூடியுள்ளது. உணவு, உரம் மற்றும் எரிபொருள்களுக்கு சீனாவை மட்டுமே வடகொரியா நம்பியிருக்கிறது. தற்போது எல்லைகள் மூடியிருப்பதால் இந்தச் சரக்குப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
 
1990 களில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு வடகொரியா நாடு தழுவிய பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் பட்டினியால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 30 லட்சம் வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.