1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 28 செப்டம்பர் 2014 (14:04 IST)

மீண்டும் சர்ச்சையில் சிக்கியது தூர்தர்ஷன்: நரேந்திர மோடியின் படத்திற்குப் பதில் மன்மோகன் சிங் படம்

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் குறித்த செய்தியில் அவருக்குப் பதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கோப்புக் காட்சிகளை ஒளிபரப்பிய தூர்தர்ஷன் தொலைக்காட்சி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டுச் சென்றார்.
 
இதைத் தொடர்ந்து, அவரது நியூயார்க் பயணம் தொடர்பான செய்திகளை மத்திய அரசின் அதிகாரப்பூர்வ 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சியான ‘டிடி நியூஸ்' வெள்ளிக்கிழமை ஒளிபரப்பியது.
 
காலையில் ஒளிபரப்பான செய்தியில், பிரதமர் நரேந்திர மோடியின் கோப்புக் காட்சிகளைக் காட்டுவதற்கு பதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கோப்புக் காட்சிகளை ஒளிபரப்பியது.
 
அண்மையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் இந்தியா வருகை தந்த போது ஆங்கிலத்தில் உள்ள ‘XI‘ என்ற வார்த்தை ரோமன் எழுத்துகளில் பதினொன்று என புரிந்து கொண்டு, டிடி நியூஸ் செய்தி வாசிப்பாளர் "பதினொறாவது ஜின்பிங்' என்று வாசித்து சர்ச்சையில் சிக்கினார்.
 
அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் போதிய பயிற்சியின்றி ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதால்தான் இதுபோன்ற சர்ச்சைகள் எழுவதாக மத்திய அரசு கருதியது.
 
இதன் விளைவாக, சீன அதிபரின் பெயரைத் தவறுதலாக உச்சரித்த செய்தி வாசிப்பாளரை பணியில் இருந்து நீக்க தூர்தர்ஷன் மேலிடம் நடவடிக்கை எடுத்தது.
 
இந்நிலையில், பிரதமரின் காட்சியை தவறுதலாக ஒளிபரப்பி மீண்டும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சர்ச்சையில் சிக்கியுள்ள தவறான இந்தக் காட்சி பலமுறை "டிடி நியூஸ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.