1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (10:23 IST)

போராட்டம் நடத்தினால் 20 ஆண்டு சிறை; மியான்மர் ராணுவம் எச்சரிக்கை!

மியான்மரில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளதை எதிர்த்து போராடுபவர்களை 20 ஆண்டுகால சிறையில் அடைப்போம் என ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த நவம்பரில் நடந்த மியான்மர் தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டிய ராணுவம் ஜனநாயக கட்சி முக்கிய தலைவர்களை கைது செய்துள்ளதுடன், மியான்மரில் ராணுவ ஆட்சியை அமல்படுத்தியுள்ளது.

ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்த தொடங்கியுள்ள நிலையில் மக்கள் போராட்டத்தை ஒடுக்க ஆயுதமேந்திய போர் வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதலாக மியான்மரின் பல பகுதிகளிலும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினால் 20 வருடம் சிறை தண்டனை என்றும், ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தகவல்களை பரப்பினால் அபராதம், ஆயுள் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளும் வழங்கப்படும் என ராணுவம் எச்சரித்துள்ளது.