புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 11 ஜூன் 2019 (18:33 IST)

சிட்டிசன் படம் போல கிராமத்தையே உரு தெரியாமல் அழித்த பயங்கரவாதிகள்

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி என்ற நாட்டில் பயங்கரவாத கும்பல் மொத்த கிராமத்தையே ஒரு நாள் இரவில் கொன்று எரித்த சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி குடியரசில் அமைந்துள்ள சிறிய கிராமம் சொபானே-கௌ. இந்த பகுதியில் 300க்கும் மேற்பட்ட டோகன் என்ற பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த பகுதியில் அல்கொய்தாவுடன் தொடர்புடையதாக கருதப்படும் புலானி என்ற பயங்கரவாத அமைப்பினர் அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுவர். டோகன் பழங்குடியினர் முடிந்தளவு அவர்களை எதிர்த்து சண்டையிட்டு அவர்களுடைய கிராமத்தில் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு சொபானே-கௌ கிராமத்திற்குள் அதிநவீன ஆயுதங்களுடன் நுழைந்தனர் புலானி பயங்கரவாதிகள். குழந்தைகள், பெண்கள் என யார் மீதும் கருணை காட்டாமல் சரமாரியாக சுடத் தொடங்கினர். அவர்களின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் டோகன் மக்கள் அங்கும் இங்கும் ஓடினர். பலர் இறந்து விழுந்தனர். பிறகு அவர்களது வீட்டிற்குள் நுழைந்து அகப்பட்டதையெல்லாம் அள்ளிக்கொண்டது அந்த கும்பல். கடைசியாக இறந்து கிடந்த பிணங்களை கூட விடாமல் அனைத்தையும் கொளுத்தி விட்டு கிராமத்தையே தீக்கிரையாக்கி விட்டு சென்றனர் அந்த பயங்கரவாத கும்பல்.

இதுவரை 134 பேரின் உடல்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கோர சம்பவத்திற்கு பல்வேறு நாடுகள் தங்கள் இரங்கல்களையும், கண்டனங்களையும் தெரிவித்திருக்கின்றன.