1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2017 (01:17 IST)

பாகிஸ்தான் மலாலாவுக்கு கௌரவ குடிமகள் தகுதி: கனடா பிரதமர் வழங்கினார்

பாகிஸ்தானை சேர்ந்த  அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்று உலகப்புகழ் பெற்ற மலாலா யூசஃப்சாய்க்கு கௌரவ குடிமகள் தகுதியை வழங்கி கனடா பெருமைபடுத்தியுள்ளது.



 


பாகிஸ்தான் பழமைவாதிகளால் கடுமையாக தாக்கப்பட்டு தற்போது பிரிட்டனில் வசித்து வரும் மலாலா, பெண் குழந்தைகளின் கல்வி, முன்னேற்றம் மற்றும் உலக நாடுகளின் அமைதிக்காக குரல் கொடுத்து வருகிறார். எதிர்காலத்தில் பாகிஸ்தானின் அதிபராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் மலாலாவுக்கு கெளரவ குடிமகள் தகுதியை கனடா வழங்கியுள்ளது. இந்த தகுதியை பெற்றுக்கொண்ட மலாலா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குடியேற்றக் கொள்கையை பெரிதும் பாராட்டினார். அமெரிக்கவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் 7 இஸ்லாமிய நாட்டு மக்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு எதிரான கொள்கைகளை வெளியிட்ட நிலையில் கனடா பிரதமர் ட்ரூடோ தொடர்ந்து அகதிகளை வரவேற்கும் முடிவை எடுத்ததற்கு அவர் நன்றி தெரிவித்து கொண்டார்.

மேலும் அவர் கூறியபோது, 'உங்களது வரவேற்பு பொன்மொழி, நிலைப்பாடு - கனடாவிற்கு நல்வரவு- எனும் வாசகம் ஒரு தலைப்புச் செய்தியையோ அல்லது ஒரு டிவிட்டர் ஹேஷ்டேக்கையோ விட உயர்ந்தது. நீங்கள் தொடர்ந்து உங்களது இதயங்களையும், இல்லங்களையும் உலகின் மிகவும் பாதுகாப்பற்ற குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்கும் திறந்து வையுங்கள் என வேண்டுகிறேன்' என்று கூறினார்