”எங்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை”… ஜப்பான் கப்பலில் மதுரை வாலிபர்கள் பேட்டி

Arun Prasath| Last Modified வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (13:26 IST)
ஜப்பான் கப்பலில் 5 தமிழர்களும் ”எங்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை, நாங்கள் நலமாக இருக்கிறோம்” என பிரபல நாளிதழைச் சேர்ந்த நிருபருக்கு வாட்ஸ் ஆப் மூலம் பேட்டியளித்துள்ளனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசுக்கப்பல், ஜப்பானில் தனது பயணிகளை ஏற்றிக்கொண்டு சுற்றுலாவுக்கு வந்தபோது, அதில் உள்ள பயணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருந்தது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 3 ஆம் தேதி ஜப்பானின் யோஹமோ துறைமுகத்திலேயே அக்கப்பல் நிறுத்தப்பட்டது. அந்த கப்பலில் பயணித்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 3,711 பேர் உள்ளனர். அதில் இதுவரை 218 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே அக்கப்பலில் உள்ள 160 இந்தியர்களில் 5 தமிழர்கள் கப்பல் ஊழியர்களாக உள்ளனர். டேனியல் (செங்கல்பட்டு), முத்து (திருச்சி), ஜெயராஜ் (கோவை), தாமோதரன் (கோவில்பட்டி), அன்பழகன் (மதுரை) ஆகியோர் தான் அவர்கள்.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த அன்பழகன், பிரபல பத்திரிக்கையைச் சேர்ந்த நிருபருக்கு வாட்ஸ் ஆப் மூலம் பேட்டியளித்துள்ளார். அதில், ”தமிழ்நாட்டைச் சேர்ந்த எங்கள் 5 பேருக்கு கொரோனா வைரஸ் இல்லை, நாங்கள் நலமாக உள்ளோம்” என கூறியுள்ளார்.

மேலும், “கப்பல் நிர்வாகம் மிகவும் நல்ல முறையாக எங்களை வழி நடத்துகிறார்கள். வருகிற 19 ஆம் தேதி எங்களை கப்பலில் இருந்து வெளியே அனுப்புவதாக கூறியுள்ளனர். விரைவில் நாங்கள் தமிழகம் திரும்புவோம்” என கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :