பிடல் காஸ்ட்ரோவை சந்தித்தார் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்


Suresh| Last Updated: செவ்வாய், 5 மே 2015 (14:13 IST)
கியூபாவின் புரட்சி நாயகனும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோவை ஜப்பான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தித்துப் பேசினார்.

 


தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கியூபாவில் கடந்த 1959ம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ தலைமையில் அந்நாட்டு மக்கள் பெரும் புரட்சியை நடத்தி சர்வாதிகார ஆட்சி புரிந்து வந்த பாட்டிஸ்டா அரசை அகற்றினர்.
 
பின்னர் பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான இடதுசாரி அரசு கியூபாவில் ஆட்சியமைத்தது. ஆனால், இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்க மறுத்த அமெரிக்கா மற்றும்அதன் கூட்டணி நாடுகள் கியூபாவுடனான அரசாங்க உறவுகளை துண்டித்துக் கொண்டது.
 
இதைத் தொடர்ந்து, கியூபா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்தது. ஆனால், இந்தத் தடைகளை எதிர் கொண்டு கியூபா பெரும் முன்னேற்றம் கண்டது.
 
அத்துடன், வெனிசுலா, ஈக்வடார், உள்ளிட்ட பல்வேறு லத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசியல் வழிகாட்டியாகவும் கியூபா இருந்து வருகிறது.
 
இந்நிலையில்,  அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் கியூபாவின் அதிபர் ரால் காஸ்ட்ரோ ஆகியோர் சமீபத்தில் நேரில் சந்தித்துப் பேசினர். இதன்பின்னர், இந்த இரு நாடுகளின் அரசு உயர்மட்ட அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
இதைத் தொடர்ந்து  இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் தூதரக உறவுகளை புதுப்பித்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடு என்ற பட்டியலிருந்து கியூபாவை நீக்கவும் அமெரிக்க அரசு முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகிறது. இதனால் சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே புதிய உறவு மலரத் துவங்கியுள்ளது. 
 
இந்நிலியில், கியூபாவுடன் பல்வேறு உலக நாடுகளும் தங்களது உறவுகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
 
இதன் ஒரு பகுதியாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரான்சு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர், கியூபாவிற்கு வருகை தந்து அந்நாட்டுடன் தங்களது உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
இதைத் தொடர்ந்து கியூபா வெளியுறவுத்துறை அமைச்சர் பிரான்சு நாட்டிற்குச் சென்று அந்நாட்டு அதிபர் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
இந்நிலையில், ஜப்பான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பூமியோ கிஷிடோ கடந்த சில தினங்களுக்கு முன்னர் கியூபா நாட்டிற்குச் சென்றார். அங்கு கியூப புரட்சியின் நாயகனான பிடல் காஸ்ட்ரோ மற்றும் அந்நாட்டின் அதிபர் ரால் காஸ்ட்ரோ ஆகியோரை சந்தித்து பேசினார்.
 
இந்த சந்திப்பின்போது, ஜப்பான் மற்றும் கியூபா நாட்டுனான உறவுகளை பலப்படுத்துவது குறித்தும், தற்போதைய முக்கியமான சர்வதேச நிலவரங்கள், பிரச்சனைகள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :