1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 4 ஜூன் 2016 (11:10 IST)

அமெரிக்க சாத்தானை நம்புவது மிகப்பெரிய தவறு - ஈரான் மதத் தலைவர் தாக்கு

அமெரிக்காவை ‘மகா சாத்தான்’ என்றும் பிரிட்டன் ஒரு ‘தீமை’ என்றும் ஈரான் நாட்டின் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கடுமையாக சாடியுள்ளார்.
 

 
அமெரிக்காவுடன் செய்துகொண்ட சமரச உடன்பாட்டால், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டன. இதன் விளைவாக ஈரான் மேற்கு நாடுகளுடன் தனது வர்த்தகத்தை அதிகரித்துள்ளது. ஆனாலும் அமெரிக்காவின் சில தடைகள் நடைமுறையில் உள்ளன. ஈரானுடன் வர்த்தகம் வைத்துக் கொள்ள அமெரிக்க வங்கிகளுக்கு தடை உள்ளது.
 
இது குறித்து ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் அவர் பேசும் போது “1979ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு அமெரிக்கா தொடர்ந்து ஈரானை தனது விரோதியாகவே பாவித்து வருகிறது. எனவே மிகப்பெரிய தீமையான பிரிட்டனையும், மகா சாத்தானாகிய அமெரிக்காவையும் நம்புவது மிகப்பெரிய தவறு.
 
பிராந்திய நெருக்கடி விவகாரங்களில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க மாட்டோம். இந்தப் பகுதிகளில் அமெரிக்காவின் நோக்கம் ஈரானின் நோக்கங்களுக்கு முற்றிலும் நேர் எதிரானது” என்று கடுமையாகச் சாடினார்.
 
மேலும், “மனித உரிமைகள், பயங்கரவாதம் என்பதைக் காட்டி மிரட்டி, அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து தப்பித்துக் கொள்கிறது” என்று அயத்துல்லா அலி காமேனி சாடியுள்ளார்.
 
“நாம் வலுவாகவும் ஒற்றுமையுடனும், புரட்சிகரமாகவும் இருந்தால் ஈரான் மீது அவதூறு பரப்புபவர்களையும், ஈரானுக்கு எதிரானவர்களையும் வெற்றியடைய விடாமல் தடுக்கலாம். மேற்கு உலகுடன் பொருளாதார உறவுகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
 
கடந்தாண்டு ஈரானுக்கும் அமெரிக்கா உட்பட 6 முக்கிய பெரிய நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட அணுசக்தி தொடர்பான சமரச ஒப்பந்தத்தின்படி செயல்படுவதில் அமெரிக்கா நேர்மையாக இல்லை என்று குற்றம் சாட்டியுள்ள காமேனி, அணுகுண்டு தயாரிப்பதாக தங்கள் நாட்டின் மீது சந்தேகத்தை உலக அளவில் அமெரிக்கா பரப்பியது என்று குற்றம்சாட்டினார்.