1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: சனி, 18 ஜூன் 2016 (13:39 IST)

ஆர்லண்டோ நகர் துப்பாக்கிச் சூடு : 70 அமெரிக்கர்களை காப்பாற்றிய இந்தியர்

அமெரிக்காவின் ஆர்லண்டோ நகரில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர் இரவு விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 50 பேர் பலியாகினர். அந்த தாக்குதல் நடைபெற்று கொண்டிருந்த போது, இந்தியர் ஒருவர் துணிச்சலுடன் 70 அமெரிக்கர்களை காப்பாற்றியுள்ளார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.


 

 
சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவின் ஆர்லண்டோ நகரில் உள்ள ஓரினச் சேர்க்கையாளர் விடுதிக்குள் புகுந்த ஓமர் மதீன் என்ற வாலிபர், துப்பாக்கியால் சுட்டதில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்த விடுதியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் இம்ரான் யூசுப்(24). இவர் இந்தியா வம்சாவளியை சேர்ந்த கடற்படை முன்னாள் வீரர் ஆவார். விடுதிக்குள் துப்பாக்கி சத்தம் கேட்டதும், அவர் உள்ளே சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் அங்கும் இங்கும் அலறி அடித்தபடி ஓடிக்கொண்டிருந்தனர்.
 
சமயோசிதமாக செயல்பட்ட இம்ரான் யூசுப், துப்பாக்கிச் சூட்டிற்கு நடுவே ஓடி, விடுதியின் பின்புற கதவை திறந்து விட்டார். அதன் வழியாக 70 பேருக்கும் மேல் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர். அவர் அப்படி செய்யவில்லை எனில், பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியிருக்கும்.
 
தனது உயிரை பணயம் வைத்து, 70 பேருக்கும் மேலானவர்களை காப்பாற்றியுள்ள இம்ரானை அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.