தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா! – பயணிகளுக்கு ஜெர்மனி, இத்தாலி தடை!
தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா பரவி வருவதால் அந்நாட்டு பயணிகளுக்கு சில நாடுகள் தடை விதித்துள்ளன.
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரொனா பாதிப்பால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சில நாடுகளில் கொரோனா வைரஸின் வீரியமடைந்த புதிய வகை வைரஸ் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா உள்ளிட்ட சில நாடுகளில் கொரொனாவின் வீரியமடைந்த வகையான பி.1.1.529 என்ற வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்னாப்பிரிக்க பயணிகள் வர ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன. புதிதாக பரவி வரும் இந்த வைரஸ் இந்தியாவில் கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.