தசம புள்ளிகள் மாறியதால் 100 மடங்கு அதிக சம்பளம் பெற்ற ஊழியர்
தசம புள்ளியை தவறாக புரிந்துகொண்டதால், ஆஸ்திரேலியாவிலுள்ள தொழிலாளர் ஒருவருக்கு 4,921.76 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு பதில் 4,92,176 ஆஸ்திரேலிய டாலர்கள் சம்பளமாக வழங்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு தசம புள்ளிகள் மாறியதால் 100 மடங்கு அதிக சம்பளத்தை அந்த தொழிலாளர் பெற்றார். பணியாளர் ஒருவரின் தவறின் காரணமாகவே இது நடந்ததாக இதுகுறித்து பேசிய அந்த பிராந்தியத்தின் தலைமை தணிக்கையாளர் கூறினார்.
ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்திலுள்ள தொலைத்தூர கிராமத்தை சேர்ந்த அந்த தொழிலாளர், இதுகுறித்து அறிந்தவுடன் பணத்தை திரும்ப அளித்துவிட்டார். பணத்தை தவறுதலாக பெற்ற தொழிலாளர் தொலைத்தூர கிராமத்தில் வசித்து வந்ததால், ஒரு வாரம் கழித்துதான் அவர் பணத்தை திரும்ப செலுத்தியதாக தலைமை தணிக்கையாளர் கூறினார்.
அந்த அறிக்கையில், கணினியில் தகவலை தவறுதலாக பதிவிட்டதும், அதைத்தொடர்ந்து கணினி அளித்த எச்சரிக்கையை பொருட்படுத்தாததும் என இரண்டு மனித தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த ஆண்டின் ஜனவரி மாதம்வரை இந்த பிராந்தியத்தின் அரசாங்க துறைகளால் மேற்கொள்ளப்பட்ட 743 அதிக பணம் வழங்கப்பட்ட நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறாக மேற்கொள்ளப்பட்ட பணப்பரிமாற்றங்களால் இழந்த பணத்தில் 7,67,000 டாலர்கள் இன்னும் அரசு துறைகளுக்கு திரும்ப வரவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்தில் ஒவ்வொரு ஆண்டும் 1.2 மில்லியன் பணப்பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதில் 0.2 சதவீத தவறுகள் நடப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காமலிருக்கும் வகையில் கணினியில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.