ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (08:00 IST)

44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை தூக்கி எரிவேன் - எலான் மஸ்க் மிரட்டல்?

போலிக் கணக்குகளின் விவரங்களை தராவிட்டால் டிவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிட்டு விடுவேன் என எலான் மஸ்க் எச்சரிக்கை. 

 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் சம்மதித்தார். இதனையடுத்து அவர் டிவிட்டரை வாங்கினால் அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 
 
டிவிட்டரில் போலி கணக்குகள்: 
இந்நிலையில் டிவிட்டரில் 20 - 50 % போலி கணக்குகள் இருப்பதாகவும் அதை  கணக்குகளை முடக்க உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். ஆனால் டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால்,  5% குறைவாகவே போலி கணக்குகள் உள்ளதாக தெரிவித்தார். இதனால் முன்னர் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அதோடு சிஇஓ பராக் அகர்வாலை அவமதிக்கும் வகையிலும் எலான் மஸ்க் பதிவு ஒன்றை போட்டார்.  
 
பின்னர் டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் 5%  குறைவாக போலி கணக்குகள் இருக்கிறது என்பதன் ஆதாரத்தை பொதுவெளியில் வெளியிட மறுத்துவிட்டார். அதை அவர் நிரூபிக்கும் வரை டிவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அதிரடியாக அறிவித்தார்  எலான் மஸ்க். 
மிரட்டும் எலான் மஸ்க்? 
தற்போது போலிக் கணக்குகளின் விவரங்களை முழுமையாக தராவிட்டால் டிவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிட்டு விடுவேன் என்று எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 
 
ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் பற்றிய தரவை முழுமையாக வழங்க தவறினால் டிவிட்டரை வாங்குவதற்கான தனது 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இருந்து விலகி விடுவேன். டிவிட்டர் தனது கடமைகளில் இருந்து மீறுவதாகவும் இணைப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதற்கான அனைத்து உரிமைகளும் எனக்கு உண்டு என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.