வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: புதன், 12 நவம்பர் 2014 (11:36 IST)

இறந்து விட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட பெண்: 45 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் நாடித் துடிப்பு

அமெரிக்காவில் பிரசவத்தின் போது இறந்து விட்டதாகக் மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு, 45 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் நாடித் துடிப்பு உண்டானதாக மருத்துவர்கள் வியப்புடன் தெரிவித்துள்ளனர்.


 
அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள போகா ரேடன் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் 40 வயதுடையவர் ரூபி கிராயுபெரா காசிமிரோ.
 
இவர், பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்கை மூலமாக பிரசவம் பார்க்கப் பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக பனிக்குடம் உடைந்து அதிலிருந்த நீர் ரூபியின் ரத்தத்தில் கலந்தது. 
 
இதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. படிப்படியாக நாடித் துடிப்பு குறைந்து கொண்டே போனது. பின்னர் சுத்தமாக நாடித் துடிப்பு இல்லாமல் போனது.
 
இதனால், ரூபி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தாரிடம் மருத்துவர்கள் அறிவித்து விட்டனர். இதற்கிடையே ரூபியின் வயிற்றிலிருந்த பெண் குழந்தையை பத்திரமாக வெளியில் எடுத்தனர்.
 
இந்நிலையில், இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட ரூபியின் உடலில் சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு,  திடீரென அசைவு தெரிந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவருக்கு சிகிச்சை அளித்து ரூபியை மீண்டும் அவர்கள் உயிர் பிழைக்க வைத்தனர்.
 
இந்தச் சம்பவம் மருத்துவ உலகில் நடந்த மிகப்பெரிய அதிசயம் என்று மருத்துவர்கள் வியப்புடன் தெரிவித்தனர்.