கொரோனா வைரஸ் எதிரொலி: ஊகான் நகருக்கு தடா போட்ட சீனா!
கொரோனா வைரஸ் பரவுவதலை தடுக்க, அந்த வைரஸ் நோய் தொற்று முதலில் கண்டறியப்பட்ட ஊகான் நகருக்கு போக்குவரத்து தடை.
மனிதர்கள் இதுவரை கண்டிராத வைரஸ் ஒன்று சீனாவில் வேகமாக பரவி வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சீன அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த இந்த வைரஸால் சீனாவில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். 550க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த வைரஸ் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது.
சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் ரஷ்யாவில் பரவினால் தடுப்பூசியை கண்டுபிடிக்க 6 மாதங்களாகும் என ரஷ்ய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த கரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பது குறித்து சீனாவில் பெக்கிங் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். அதில், இந்த கரோனா வைரஸ், பாம்புகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என தெரிய வருகிறது என தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதலை தடுக்க, அந்த வைரஸ் நோய் தொற்று முதலில் கண்டறியப்பட்ட ஊகான் நகருக்கான சகல போக்குவரத்துகளையும் சீன அரசு ரத்து செய்துள்ளது. அந்த நகரைச் சேர்ந்தவர்கள் யாரும் ஊரை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, ஊகானுக்கு செல்ல அனுமதி இல்லை என்றும் சீன அரசு அறிவித்துள்ளது.