புதன், 20 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (09:01 IST)

போரை நிறுத்த முடியாது! ஹெஸ்புல்லாவை ஒழிச்சுட்டுதான் ஓய்வு! - இஸ்ரேல் பிரதமர் உறுதி!

இஸ்ரேல் - ஹெஸ்புல்லா அமைப்பு இடையே போர் மூண்டுள்ள நிலையில் உலக நாடுகளின் அமைதி பேச்சுவார்த்தையை இஸ்ரேல் காதில் வாங்கிக் கொள்ளாமல் போர் நடத்துவதில் உறுதியாக உள்ளது.

 

 

இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் இடையேயான போரில் பாலஸ்தீன் மக்கள் அதிகம் வாழும் காசா பகுதியில் இஸ்ரேல் வான்வழி, தரைவழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தியது. இதில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்ட நிலையில், ஹமாஸ்க்கு ஆதரவாக லெபனான் எல்லையில் செயல்படும் ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் வடக்கு பகுதியில் தாக்குதல்களை தொடங்கியுள்ளது.

 

இதனால் இஸ்ரேலின் வடக்கு பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை அதிகரித்துள்ளது. தொடர்ந்து தரை வழி தாக்குதலுக்கும் திட்டமிட்டு வருகிறது. இதனால் மத்திய தரைக்கடல் நாடுகளில் பெரும் பதற்றம் எழுந்துள்ளது.
 

 

அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபை மாநாடு தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேல் - ஹெஸ்புல்லா இடையே பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். அமைதி பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு ஏதுவாக 21 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.

 

ஆனால் அந்த கோரிக்கைகளை புறம் தள்ளியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ”நாங்கள் முழு பலத்துடன் ஹெஸ்புல்லாவை தொடர்ந்து தாக்குவோம். எங்கள் எல்லா இலக்குகளில் வெற்றி அடையும் வரை போரை நிறுத்த மாட்டோம். அவற்றில் முக்கியமானது வடக்கில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக திரும்புவது” என பேசியுள்ளார். இதனால் அமைதி பேச்சுவார்த்தைக்கான நம்பிக்கை தகர்ந்த நிலையில், இஸ்ரேல் யுத்தக்களம் மேலும் சூடாகியுள்ளது.

 

Edit by Prasanth.K