பர்மிய எல்லை நகரில் புலிகளின் உடற்பாக விற்பனை அதிகரித்துவருவதாக புதிய ஆய்வு

Last Updated: செவ்வாய், 23 டிசம்பர் 2014 (06:11 IST)
புலிகள், சிறுத்தைகள் போன்றவற்றின் உடற்பாகங்கள் பர்மா வழியாக சீனாவில் விற்கப்படுகின்ற வர்த்தகம் அண்மைய ஆண்டுகளில் மிகவும் அதிகமாகியுள்ளதாக இருபது ஆண்டுகால கணக்கெடுப்பு தரவுகளைக் கொண்டு நடத்தப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.
 


சீனாவுடனான எல்லையை ஒட்டியிருக்கும் பர்மாவின் மொங் லா என்ற ஊரில் கடந்த எட்டு ஆண்டுகளில் புலிகளின் உடற்பாகங்கள் போன்றவற்றை விற்கக்கூடிய கடைகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
எண்பது சதவீத கணக்கெடுப்புகளில் புலிகளின் உடற்பாகங்கள் விற்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வகையில் பார்த்தால் குறைந்தது இருநூறு புலிகளின் உடற்பாகங்கள் விற்கப்பட்டுள்ளன.
 
ஆனால் சிறுத்தைகளின் உடற்பாகங்கள்தான் மிக அதிகமாக விற்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மொத்தம் 480 சிறுத்தைகளுடைய உடற்பாகங்கள் விற்பனையாகியிருப்பதாக தரவுகள் காட்டுகின்றன.
 
காட்டு விலங்குகளின் உடற்பாகங்களை ஆப்பிரிக்கா வரையான தொலைதூர இடங்களுக்கு விற்கின்ற ஒரு முக்கிய சந்தையாக மொங் லா என்ற அந்த ஊர் உருவெடுத்துவருகிறது என்ற கூற்றை இந்த ஆய்வு வலுப்படுத்தியுள்ளது.
 
பயலோஜிக்கல் கன்சர்வேஷன் என்ற சஞ்சிகையில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
 
தாய்லாந்துடனான எல்லையிலுள்ள டச்சிலெக் என்ற ஊரில் நடந்துவந்த விலங்கு வர்த்தகம் இதே காலப்பகுதியில் சரிந்துவந்துள்ளதாகவும் இந்த ஆய்வு காட்டியுள்ளது.
 
தால்யாந்து அதிகாரிகள் நடவடிக்கைகளை வலுப்படுத்தியதன் விளைவாக அங்கு இந்த வர்த்தகம் குறைந்திருக்கலாம் என இந்த ஆய்வு அறிக்கையை எழுதியவரான விலங்கு வர்த்தக கண்காணிப்பு அமைப்பான டிராஃபிக் என்ற அமைப்பின் கிறிஸ் ஷெப்பர்ட் கூறுகிறார்.
 
மொங் லா நகரம் அரசாங்கத்துடன் சமாதான உடன்பாடு ஒன்று செய்துகொண்டுள்ள ஆயுதக் குழு ஒன்றின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பர்மீய அதிகாரிகளுக்கு இங்கு அதிகாரம் இல்லை.
 
அழிவின் விளிம்பிலுள்ள விலங்கினங்களை விற்பனையைத் தடைசெய்கிற சர்வதேச ஒப்பந்தத்துக்கு அமைய புலிகள் மற்றும் சிறுத்தைகளின் உடற்பாகங்களுடைய விற்பனைக்கு பர்மாவில் தடை உள்ளது.
 
ஆனால் அந்த தடைச் சட்டம் மொங் லாவில் செயல்படாமல் இருக்கிறது என உலக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
 
வன விலங்குகளின் உடற்பாகங்கள் பல சீனாவுக்கு நுழையாமல் மொங் லாவில் வைத்தே சீன சுற்றுலாப் பயணிகளால் புழங்கப்படுகின்றன.
 
வன விலங்கு இறைச்சியை அவர்கள் சாப்பிடுகிறார்கள். புலியின் எலும்பைக் கொண்டு செய்யப்பட்ட மதுபானத்தை அருந்துகிறார்கள் என உலக வனவிலங்கு நிதியத்திற்காக மிகொங் பகுதியில் செயலாற்றுகின்ற தோமஸ் கிரே கூறுகிறார்.
 
ஆனால் புலித்தோல் போன்ற விஷயங்கள் சீனாவுக்குள் இறக்குமதியாகவே செய்கின்றன என அவர் குறிப்பிடுகிறார்.
 
உலகிலேயே மிக அதிகமாக புலிகளின் உடற்பாகங்கள் நுகர்வுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் நாடு சீனாதான்.
 
உலகில் மொத்தமாகவே மூவாயிரம் புலிகள்தான் தற்போது எஞ்சியுள்ளன. சென்ற நூற்றாண்டில் இருந்த புலிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இது வெறும் 5 சதவீதம்தான்.


இதில் மேலும் படிக்கவும் :