வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2016 (14:33 IST)

போலீஸ் ஸ்டிரைக்: ஒலிம்பிக் பாதுகாப்பு குறித்து பிரேசில் அரசு கவலை

ரியோ டிஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையே, காவல் துறையினர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் புது சிக்கல் எழுந்துள்ளது.


 

 
2016-ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி ரியோ டிஜெனீரோவில் நடைபெறவுள்ளது. பல தரப்பு மக்களும் ஒலிம்பிக் போட்டிகளைப் பார்க்க இப்போதே வர ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் சிறப்பு சம்பளத்தை பிரேசில் அரசு கொடுக்காமல் தாமதம் செய்து வருவதாக  ரியோ போலீஸார் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர். 
 
‘வெல்கம் டு ரியோ’ என்று வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளுக்குக் கீழே போலீஸ் சார்பில் ‘வெல்கம் டு ஹெல்’ என்றும், ‘ஒலிம்பிக்கைப் பார்க்க வரும் வெளிநாட்டவர்களே மறுபடியும் பத்திரமாக திரும்பிப் போவதற்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்’ என்றும் எழுதப்பட்ட பதாகைகளுடன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதை தவிர, இந்த ஆண்டில் மட்டும் பிரேசிலில் 54 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். திருடர்கள், கொள்ளையர்கள் என பல தரப்பினரால் இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனவே பணி பாதுகாப்பு கோரியும் ஸ்டிரைக் நடக்கிறது. மேலும் ரியோவைப் பாதுகாக்கத் தேவையான நவீன வசதிகளை அரசு செய்து தரவில்லை என்றும் போலீஸார் குற்றச்சாட்டி உள்ளனர்.
 
ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 5ம் தேதி பிரமாண்ட தொடக்க விழா  தொடங்கி, ஆகஸ்ட் 21ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும். இந்த நிலையில் போலீஸார் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் பிரேசில் அரசு குழப்பமடைந்துள்ளது.