வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 11 ஜூலை 2016 (12:00 IST)

மதபோதகர் ஜாகிரின் போதனைகளை ஒளிபரப்ப தடை

ஜாகிர் நாயக்கின் போதனைகளை ஒளிபரப்பும் ‘பீஸ்டிவி’ சேனலுக்கு வங்கதேச அரசு தடை விதித்துள்ளது.
 

 
வங்கதேச தலைநகர் தாகாவில் உள்ள ஒரு ஓட்டலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுப்பட்ட 2 பேரை, பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரித்தனர்.
 
அப்போது மாகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய மத போதகர் ஜாகிர்நாயக்கின் பேச்சால் கவரப்பட்டு நாங்கள் தீவிரவாத பாதைக்கு சென்றதாக தெரிவித்தனர். இந்த தகவலை வங்கதேசம் இந்தியாவுக்கு தெரிவித்து ஜாகிர்நாயக்கின் பேச்சை ஆய்வு செய்ய அறிவுறுத்தியது.
 
இதையடுத்து மத்திய அரசும், மகாராஷ்டிர அரசும் ஜாகிர் நாயக் பேச்சை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தன. இவர் மும்பையில் இஸ்லாமிக் ஆராய்ச்சி அறக்கட்டளை நடத்துகிறார்.
 
இதற்கிடையே ஜாகிர் நாயக்கின் போதனைகளை ஒளிபரப்பும் ‘பீஸ் டிவி’ சட்டவிரோதமாக செயல்படுகிறது என்ற தகவலும் வெளியாகியது. சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் ஜாகிர் நாயக்கிற்கு இங்கிலாந்து, கனடாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மலேசியாவில் தடை விதிக்கப்பட்ட 16 இஸ்லாமிய அறிஞர்களில் நாயக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
வங்கதேச உள்துறை அமைச்சகமும் ஜாகிர் நாயக்கின் போதனை வீடியோக்களை ஆய்வு செய்தது. வங்கதேச பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை இதனை ஆய்வு செய்வதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
 
இப்போது ஜாகிர் நாயக்கின் போதனைகளை ஒளிபரப்பும் ‘பீஸ் டிவி’ சேனலுக்கு வங்கதேசம் தடை விதித்துள்ளது. வங்கதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
 
இக்கூட்டத்தில் ‘பீஸ் டிவி’ க்கு தடை விதிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதற்கிடையே வங்கதேசத்தில் ஜாகிர் நாயக்கின் பண பரிவர்த்தனையையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.