1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By mahendran
Last Modified: வியாழன், 15 ஜூலை 2021 (16:16 IST)

தென்னாப்பிரிக்க கலவரத்தில் பாதிக்கப்படும் தமிழர்கள்…நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்!

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து அங்குள்ள தமிழர்கள் தாக்கப்படுவது குறித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் "தென்னாப்பிரிக்காவில், அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் வெடித்துள்ள கலவரம் கட்டுக்கடங்காமல் பெருகிக் கொண்டிருக்கிறது. இந்தக் கலவரங்களின்போது தமிழர்களும், அவர்களின் உடமைகளும் தாக்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.  தென்னாப்பிரிக்க அதிபராக 2009-18 காலத்தில் பணியாற்றிய ஜேக்கப் ஜூமா மீதான ஆயுத பேர ஊழல் வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேர் நிற்கத் தவறியதற்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டு, அந்த வழக்கில் அவருக்கு 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, ஜேக்கப் ஜூமா கடந்த வாரம் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

அவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டங்களில் வெடித்த வன்முறை கலவரமாக மாறியிருக்கிறது. அடுத்தடுத்த நாட்களில் கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், நாளுக்கு நாள் கலவரம் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாகத் தொடரும் கலவரத்தில் 72 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். தென்னாப்பிரிக்கக் கலவரத்தில் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில், அங்குள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களும், அவர்களின் வணிக சொத்துகளும் குறிவைத்துத் தாக்கப்படுகின்றன என்பதுதான். இதைத் தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான டர்பனைத் தலைநகரமாகக் கொண்ட கவாசூலு நாடால் மாகாணம் தான் ஜேக்கப் ஜூமாவின் சொந்த மாநிலமாகும். அந்த மாநிலத்தில்தான் மிக அதிக அளவில் கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. அம்மாநிலத்தில் உள்ள சாட்ஸ்வொர்த், ஃபோனிக்ஸ், டோன்காட், பாம்வியூ, சாஸ்திரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மிக அதிக அளவில் கலவரங்கள் நடந்து வருகின்றன. அங்குள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் வணிக நிறுவனங்களும் வீடுகளும் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றன. இதனால் அங்குள்ள இந்தியர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் மீதான தாக்குதலைத் தடுக்கும்படி, தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடர்புகொண்டு பேசிய பிறகும் கலவரம் தொடர்வதுதான் கவலையளிக்கிறது. தென்னாப்பிரிக்காவில் எப்போது கலவரம் வெடித்தாலும், அதனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது இந்தியர்கள்தான். கவாசூலூ நடால் உள்ளிட்ட தென்னாப்பிரிக்காவில் பல மாநிலங்களில் இந்தியர்கள் வணிக ரீதியாக வலிமையாக இருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் இத்தகைய தாக்குதல்களை அங்குள்ள சிலர் தூண்டிவிடுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவின் விடுதலைப் போராட்டம், இனவெறிக்கு எதிரான போராட்டம், தென்னாப்பிரிக்க விவசாயம் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட அனைத்திலும் இந்தியர்களின் பங்கு, குறிப்பாகத் தமிழர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். அதற்காகக் கொண்டாடப்பட வேண்டியவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவது மிகவும் வேதனையளிக்கிறது. இந்த நிலை இனியும் தொடரக் கூடாது. இந்தியா சார்பில் சிறப்புப் பிரதிநிதி ஒருவரை அனுப்பி இந்தியர்களுக்கு எதிராகக் குறிவைத்து நடத்தப்படும் கலவரத்தை ஒடுக்கும்படி தென்னாப்பிரிக்காவிடம் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். அங்குள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்". எனக் கூறப்பட்டுள்ளது.