பாடகரை கட்டிப்பிடித்த இளம்பெண் கைது
சவுதியில் மேடையில் பாடிக்கொண்டிருந்த பாடகரை ஆனந்தத்தில் கட்டிப்பிடித்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகன் முகமது பின் சல்மானும் பல்வேறு பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களது மாற்றங்கள் சில பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக உள்ளது.
சமீபத்தில் பெண்கள் முறைப்படி ஓட்டுனர் உரிமம் பெற்று கார் ஓட்டலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் பொது நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்க கூடாது என்று நீண்டகாலமாக இருந்து வந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் சவுதியில் பாடகர் மஜித் அல் மொஹண்டிஸின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்த பாடகர் மஜித்தை இளம்பெண் ஒருவர் ஓடி வந்து கட்டிப்பிடித்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அங்கிருந்த பாதுகாவலர்கள் அந்த பெண்ணை அங்கிருந்து வெளியேற்றினர். சவுதியில் பெண்கள் பொதுவெளியில் தங்களுக்கு தொடர்பில்லாத ஆண்களுடன் பேச பழக அனுமதியில்லை.
அப்படி இருக்கும் போது இந்த பெண் செய்தது குற்றம் என்பதால் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.