திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. 2014 -நிகழ்வுகள்
  3. உலகம் 2014
Written By
Last Modified: வெள்ளி, 18 மே 2018 (15:21 IST)

பின்னடைவுகள் தோல்விகள் அல்ல! வரலாறு திரும்பும்!

தம்மை யார் ஆட்சி புரிய வேண்டும் என்பது ஜனநாயகத்தில் மக்களே தீர்மானிக்க வேண்டும். மக்களை மையப்படுத்தியே நாடுகளின் இறைமை வகுக்கப்படுகின்றது. நிலப் பகுதிகளின் பிரிப்பும்  சேர்க்கையும் பூகோளத்தில் பல இடங்களில் வெவ்வேறு கால கட்டங்களில்தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகின்றது. தமிழ் மக்களை பொறுத்தவரை அடிப்படை உரிமைகளை கேட்டு சனநாயக வழியில் போராடினார்கள். நீதி வழங்குவதற்குப் பதில் அடக்குமுறை ஏவி விடப்பட்ட போது தவிர்க்க முடியாத கட்டத்திலேயே ஆயுத போராட்டம்ஆரம்பித்தது.


தனது இறையாதிக்கத்துள் வரும் நிலப் பிரதேசத்தினுள் உள்ள மக்கள் மீது படு மோசமான ஆயுத வன்முறையை ஏவி விட்ட சிங்களதேசம், தான் இழைத்த கொடுமைகளை இன்றுவரை  மீண்டும் மீண்டும் மறுதலித்து வருகின்றது. ஆனால் 2009லிருந்த நிலை இன்று இல்லை. சிறிலங்காவின் அப்பட்டமான பொய்களும் பரப்புரைகளும் உலகளாவிய எம் தமிழினத்தின் பொருத்தமான முன்னெடுப்புகளினால் முறியடிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களை பயங்கரவாதிகள் என்று பழி சுமத்திய சிங்கள தேசம் மீது இன்று அப்பாவி தமிழ் மக்களுக்கெதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டுமென்ற அளவிற்கு பன்னாட்டு சமூகம் தீர்மானங்களைக் கொண்டு வந்துள்ளது.

"வாள் எடுத்தவன் வாளால் வீழ்வான்" என்ற பழமொழி சொல்லப்படுவதுண்டு. இப் பழமொழி தனிப்பட்டவர்களுக்கு மட்டுமன்றி நாடுகளுக்கும் ஏற்புடையதா? நாடுகள் பாதுகாப்பிற்காக தம் வருவாயில் பல கோடிக்கணக்கான பெறுமதியை செலவழித்து ஆயுதம் தரிக்கின்றன. அதற்கான தார்மீகக் காரணம் தம் மக்களை பாதுகாக்கவே என்று சொல்கின்றன. ஆனால் தமிழ் மக்கள் வகைதொகையின்றி கொல்லப்படவும்  அங்கம் சிதைக்கப்படவும் காரணமாக அமைந்தவை பொதுமக்கள் மீது பாவிக்கக் கூடாதவை என்றுவகைப்படுத்தப்பட்ட  கனரக ஆயுதங்கள் , இரசாயன ஆயுதங்கள் மற்றும் கொத்துக் குண்டுகள், உயரழுத்த ஆயுதங்கள் (Thermobaric weapons) போன்ற பயங்கர அழிவு தரும் ஆயுதங்களே ஆகும்.

பிரித்தானிய தமிழர் பேரவை உட்பட பல உலகளாவிய அமைப்புகள் மூலம் பல்வேறு சாட்சியங்கள் தொகுக்கப்பட்டு ஐ.நா.விடம்இரகசியம் பேணல் உத்தரவாதம் பெற்று காலத்திற்கு காலம் சமர்ப்பிக்கப்பட்டு வந்துள்ளது. தனது மக்கள் என தமிழ் மக்களை உரிமைகொண்டாடும் சிங்கள தேசம் பேரழிவு தரும் போராயுதங்களை அப்பாவி தமிழ் மக்களுக்கெதிராக ஏவி விட்டமை சர்வதேசசட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் விழுமியங்களுக்கும் முற்று முழுதாக எதிரானது என்பதனை நாம் அனைவரும் வலியுறுத்தியதின்அடிப்படையலேயே உலகம் தவிர்க்க முடியா நிலையில் செயல்படத் தொடங்கியது.

எம் குரல் தளர்ந்தாலோ ஓங்கியொழிக்கப்படாமலோ இருந்தால் உலகின் குரல் தளரும், உலகின் கடமைகள் தவறும், செயல்பாடுகள் முடிவடையும். மீண்டும் 2009லிருந்த நிலை தமிழர் தாயகத்தில் மெல்ல மெல்ல திரும்ப உருவாகும். எதிர்வரும் 2019 மார்ச் மாதத்தின் பின்ஐ.நா.மனித உரிமைக் கழகத்தின் 25 கடப்பாடுகள் உட்பட சர்வதேச தளைகளிலிருந்து முற்று முழுதாக தன்னை விடுவிக்க சத்தமின்றிக்காய்களை நகர்த்தி வரும் சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலைப் புரிந்து கொள்வோம். எம் அனைத்து வளங்களையும் ஒன்று திரட்டி எம்சக்தி சிதரிப் போகாமல் வியூகம் வகுத்து பொது எதிரிக்கெதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். வெற்றிபெற்றவர்களே வரலாற்றினை எழுதுகிறார்கள்.


பின்னடைவுகள் தோல்வி அல்ல, சோர்வடைதலும் செயல்படாமையும் தான் தோல்வியை நிரந்தரமாக்கும். பின்னடைவுகள்அனைத்திலிருந்தும் மீண்டெழுந்து புதிய வரலாற்றினை நாம் படைப்போம்!

பிடித்துக் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் 450 நாட்களாக தொடர்கின்றது, நில மீட்புக்கான போராட்டங்கள்தொடர்கின்றன, மிலேச்சத்தனமான பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படவில்லை, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் கை விடப்பட்டுவிட்டது, தெற்கில் இனவாதம் தன் கோர முகத்தை மீண்டும் வெளிப்படுத்த முனைகின்றது. இதுவரை இடம்பெற்ற கொடுமைகள்எதிர்காலத்தில் மீள நிகழாமலிருக்க தேவைப்படும் ஸ்ரீலங்கா தேசத்தின் கட்டமைப்பு மாற்றங்கள் நடைபெறவில்லை, வெளிநாட்டு


நீதிபதிகளை உள்ளடக்கிய நீதி விசாரணைக்கான சிறு அசைவு கூட இதுவரை இடம்பெறவில்லை. முள்ளிவாய்க்கால், தமிழ் இனவழிப்பின் அடையாளம். படுகொலை செய்யப்பட்ட எம் மக்களை நினைவுகூருவதற்கும் அவர்களுக்கானநீதியைக் கோரியும்  முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.  உலகெங்கும் நடைபெறும் இந்நிகழ்வுகளில் பங்கேற்கும்எம்மக்கள் தொகை,  நீதிக்கான எமது வேட்கையை உணர்த்தும் அளவுகோலாகப்  பார்க்கப்படுகிறது. எனவே, இந் நிகழ்வுகளில் நாம்பெருந்திரளாகக்  கலந்து நீதிக்கான எமது குரலை ஓங்கி ஒலிப்போம்.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு கூரல் நீதிக்காக எம் மக்களை ஒற்றுமையாக அணி திரட்டட்டும்!

 தமிழ் மக்கள் பக்கமே நியாயம் உள்ளது. இறுதியில் வெல்வது நீதியாகட்டும்!