பிள்ளையாருக்கு பிடித்தமான விதவிதமான கொழுக்கட்டையை நாமும் சமைத்து உண்போம்...

 
Sasikala|
1. கொழுக்கட்டை
 
தேவையான பொருட்கள்:
 
அரிசி மாவு - 1 டம்ளர்
தண்ணீர் - 1 டம்ளர்
உப்பு - சிறிதளவு
எண்ணை - 2 டீஸ்பூன்
 
கொழுக்கட்டை மாவு செய்முறை:
 
ஒரு அகலமான, அடிகனமான பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீரை விடவும். தண்ணீர் தள தள வென்று கொதிக்கும்பொழுது தேவையான அளவு உப்பு, எண்ணை விட்டு பிறகு மாவை கொட்டி கிளறவும். அடுப்பை சிறிய தீயில் வைத்து மாவின் நிறம் மாறி கையில் ஒட்டாமல் வரும்பொழுது இறக்கி விடவும்.

 
 
உள்ளே வைக்க தேங்காய் பூரணம் செய்ய தேவையான பொருட்கள்:
 
தேங்காய் - 1 மூடி (துருவிக்கொள்ளவும்)
வெல்லம் - 50 கிராம் (பொடிக்கவும்)
ஏலக்காய் - 1 பொடித்தது
 
வாணலியில் தேங்காய், வெல்லம், சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும். இரண்டும் சேர்த்து வாணலியில் ஒட்டாமல் வரும் பொழுது இறக்கி ஏலக்காய் பொடி சேர்க்கவும். பூரணம் தயார்.
 
 
கொழுக்கட்டை செய்முறை:
 
சிறிது மாவை எடுத்து நன்றாக பிசைந்து உருட்டி தட்டையாக தட்டி பூரணத்தை உள்ளே வைத்து மூடி உருண்டையாவோ அல்லது பட்டையாகவோ நம் விருப்பம்போல் படித்து கொள்ளலாம். ஆவியில் 5 நிமிடம் வேக வைத்து எடுத்தால் கொழுக்கட்டை ரெடி.
 
குறிப்பு:
 
மேற்குறிப்பிட்ட செய்முறை கொண்டு, பூரணத்தை மட்டும் வகைவகையாக செய்து அதனுள் வைத்து சமைக்கலாம். அவை வெல்ல கொழுக்கட்டை, கார/உப்பு கொழுக்கட்டை, எள்ளு கொழுக்கட்டை ஆகியவையாகும். 
 
  நாம் விருப்பப்படியும் பூரணத்தை தயார் செய்து வைக்கலாம்.
 
2. எள் பூரணம் செய்முறை:
 
வெள்ளை அல்லது கருப்பு எள் - 100 கிராம் (வறுக்க வேண்டும்)
வெல்லம் - 50 கிராம்
ஏலக்காய் - 2 பொடித்தது
 
ஒரு வாணலியில் எல்லை போட்டு வறுக்கவும். எள் படபடவென்று வெடிக்கும், கருக விடாமல் வறுக்கவும். ஆறவைத்து மிக்சியில் எல்லை போட்டு ஒரு சுற்று சுற்றி வெல்லம், ஏலக்காய், சேர்த்து பொடித்து எடுக்கவும். எள் பூரணம் ரெடி.
 
3. உளுந்து பூரணம் செய்முறை:
 
வெள்ளை உளுந்து - 1 டம்ளர் (1/2 மணி நேரம் ஊறவைக்கவும்)
பச்சை மிளகாய் - 5 (அவரவர் காரத்திற்கேற்ப)
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - சிறிது
கடுகு - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்
எண்ணை - 2 டீஸ்பூன்
 
உ.பருப்பு, ப.மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்சியில் கொஞ்சம் கரகரப்பாக அரைக்கவும். தண்ணீர் விடாமல் தெளித்து அரைக்கவும். பிறகு அதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடம் வேக விடவும். பிறகு ஆற வைத்து கையால் உதிர்த்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு போட்டு கடுகு பொரிந்தவுடன் உதிர்த்து வைத்துள்ள உளுந்து கலவையை போட்டு தேங்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி எடுக்கவும். இது உளுந்து பூரணம்.


இதில் மேலும் படிக்கவும் :