செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வாழைத்தண்டு துவையல் செய்வது எவ்வாறு...?

தேவையான பொருட்கள்:
 
வாழைத்தண்டு - சிறிய துண்டு
தேங்காய் - 1 துண்டு
தனியா - கால் டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - இரண்டு
பூண்டு - நான்கு பல்
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு - சிறிதளவு
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

செய்முறை:
 
முதலில் தேங்காயை துருவிக்கொள்ள வேண்டும். பின் வாழைத்தண்டை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்து பின் தனியாவை, போட்டு வதக்க வேண்டும். 
 
அடுத்து அதில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய வாழைத்தண்டையும் போட்டு வதக்கவும். தண்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். பின் தேங்காய் துருவல், புளி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி ஆறிய பிறகு பூண்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு நன்றாக அரைத்து கொள்ளவும். 
 
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்து துவையலில் கொட்டி பரிமாற சுவையான வாழைத்தண்டு துவையல் தயார்.