வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Murugan
Last Updated : திங்கள், 16 மே 2016 (20:04 IST)

வாக்குப்பதிவு நிறைவு : தமிழகத்தில் 69.19 சதவீத வாக்குகள் பதிவு

தமிழகம், புதுச்சேரி, கேரள மாவட்டங்களில் இன்று நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
 
தமிழகத்தில், அரவங்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர மற்ற 232 தொகுதிகளில் இன்று தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு  மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.
 
இன்று நடந்த தேர்தலில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களும் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வாக்கு சாவடிக்கு சென்று வாக்களித்தனர்.
 
மேலும், பொது மக்கள் மற்றும் பெரும்பாலான திரைப்பட நடிகர், நடிகைகள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.
 
தமிழகத்தில் காலை முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மழை காரணமாக சில மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு மந்தமானது. 


 

 
மதியம் 1 மணி நிலவரப்படி 42.1 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. அதற்கடுத்து, மதியம் 3 மணி நிலவரப்படி 63.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில், மாலை ஆறு மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. தமிழகத்தை பொறுத்தவரை மாலை 5 மணி நிலவரப்படி 69.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிகிறது.

ஆனால், ஏற்கனவே வரிசையில் காத்திருந்த பலருக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் வாக்களித்து வருகின்றனர். 
 
டோக்கன் வழங்கப்பட்ட அனைவரும், வாக்களித்த பின்புதான், இறுதியான வாக்குபதிவு சதவீதம் தெரியவரும் என்றும், அதற்கு இன்னும் இரண்டு மணிநேரம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

முக்கியமாக, பென்னாகரம் மற்றும் எடப்பாடி தொகுதியில் அதிக பட்சமாக 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், தமிழகத்திலேயே சென்னையில்தான் குறைந்த பட்ச வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

அதேபோல், கேரளாவில் 6 மணி வரை 74 சதவீதமும், புதுச்சேரியில் 81.94 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.