1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (11:00 IST)

தேர்தலில் போட்டியிட அதிமுகவுக்கு தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ்

தேர்தலில் போட்டியிட அதிமுகவுக்கு தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ்

இந்த தேர்தலில் போட்டியிட அதிமுகவுக்கு தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
பருவமழைக் காலங்களில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள் தோன்றுவதைப் போல தேர்தல் காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் அதிமுகவினரின் இல்லங்களில் இருந்து கோடிக் கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
 
அதிமுக மேலிடத்தின் ஆதரவுடன் பணம் பதுக்கி வைக்கப்படுவது தெரிந்தும், அதிமுக தலைமை மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
 
சென்னை எழும்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் வாக்காளர்களுக்கு தருவதற்காக அதிமுக நிர்வாகி ஒருவரின் இல்லத்தில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்ததையடுத்து அந்த இல்லத்தில் தேர்தல் அதிகாரிகளும், வருமான வரித்துறை அதிகாரிகளும் ஆய்வு நடத்தினர்.
 
அந்த சோதனையில் ரூ.4.72 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. பணத்தை பதுக்கி வைத்திருந்த அதிமுக நிர்வாகி விஜயகுமாரும், அவரது மகன் விஜய் கிருஷ்ணசாமியும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் வைத்தியலிங்கத்துக்கு நெருக்கமானவர்கள் என்றும் கூறப்படுகிறது.
 
அதேபோல், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் அதிமுக நிர்வாகி ஒருவரின் வீட்டில் ஆய்வு நடத்தப்பட்டு அங்கும் பெருமளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
கரூர் மாவட்டம் அய்யம்பாளையத்தில் அன்புநாதன் என்ற அதிமுக நிர்வாகி வீட்டிலிருந்து ரூ.4.80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த விசாரணை முடிவதற்கு முன்பாகவே சென்னையில் பெருமளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த இரு நாட்களில் மட்டும் ரூ.11 கோடிக்கும் கூடுதலாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக கூறப்படும் போதிலும், உண்மையில் பிடிபட்ட பணத்தின் மதிப்பு இன்னும் பல மடங்கு இருக்கலாம் என்றும், அதிமுக சார்பு அதிகாரிகளின் துணையுடன் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு குறைத்து காட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் ஓட்டுக்குத் தருவதற்காக பணத்தை பதுக்கி வைத்திருந்த அதிமுக நிர்வாகிகளான அன்புநாதன், விஜய் கிருஷ்ணசாமி ஆகிய இருவரும் முறையே அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம் ஆகியோரின் நம்பிக்கைக்குரிய பினாமிகள் என்பது தான்.
 
அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகியோர் தான் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய ஐவர் அணியாக செயல்பட்டனர். ஒரு கட்டத்தில் ஊழல் செய்த பணத்தை முறையாக கணக்கு காட்டி ஒப்படைக்கவில்லை என்பதால் மேலிடத்தின் கோபத்திற்கு ஆளான இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இவர்கள் மற்றும் இவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அதிமுக மேலிடம் நடத்திய ஆய்வுகளில் மொத்தம் ரூ.30,000 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ஏற்கனவே குற்றஞ்சாற்றியிருந்தேன்.
 
அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பணத்தைக் கொண்டு தான் தேர்தலை சந்திக்க அதிமுக மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும், அந்த பணம் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மூலமாகவே வேட்பாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட இருப்பதாகவும் கடந்த மார்ச் 21 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தேன். இதில் சம்பந்தப்பட்ட இரு அமைச்சர்களின் பினாமிகளிடமிருந்து பெருமளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது ஒரு மாதத்திற்கு முன் நான் எழுப்பிய புகாருக்கு வலு சேர்த்திருக்கிறது.
 
அந்த வகையில் பார்த்தால் தேர்தல் களத்தில் அதிமுக இறக்க திட்டமிட்டுள்ள பணத்தில் 0.01% கூட இன்னும் பிடிபடவில்லை. அமைச்சர்களின் மற்ற பினாமிகள் மூலமாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஆம்புலன்ஸ்களிலும், காவல்துறை அதிகாரிகளின் வாகனங்களிலும் இப்போது கூட பணம் கொண்டு செல்லப்படலாம்.
 
இதையெல்லாம் தடுக்க வேண்டுமானால், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அவர்களுக்கும் வழிகாட்டும் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போது தான் தேர்தலில் பண பலத்தை ஒழித்து நியாயமாகவும், சுதந்திரமாகவும் தேர்தலை நடத்த முடியும். இவையெல்லாம் தேர்தல் ஆணையத்திற்கு நன்றாக தெரியும் என்ற போதிலும், அதிமுக மேலிடம் மீது நடவடிக்கை எடுக்க தாமதிப்பது ஏன்? என்பது தெரியவில்லை.
 
தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளில் பெரும்பான்மையானோர் அ.தி.மு.க.வின் அனுதாபிகளாக இருப்பதும் இதற்கு இன்னொரு காரணமாகும். தமிழகத்தில் 4 மாவட்ட ஆட்சியர்கள், 5 காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 18 அதிகாரிகள் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டனர் என்ற குற்றச்சாற்றின் அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் என்ற போதிலும், இத்தகைய நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட வேண்டிய அதிகாரிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்.
 
அத்தகைய அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்வதுடன், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஜனநாயகத்தை சீர்குலைக்க முயலும் அதிமுக இந்த தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.