வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2019 (17:35 IST)

22 வருடங்கள் கழித்து வரும் “விடாது கருப்பு” – அமானுஷ்ய தொடர்

1997களில் டி.வி தொடராக வெளிவந்து மக்களை திகிலின் உச்சத்திற்கே கொண்டு சென்ற “விடாது கருப்பு” அமானுஷ்ய தொடர் மீண்டும் யூட்யூப் மூலமாக வெளியாகி பரவலான வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழின் பிரபல நாவலாசிரியர் இந்திரா சௌந்தர்ராஜனின் “விட்டுவிடு கருப்பா” எனும் நாவலை மையமாக கொண்டு 1990களில் டி.வி தொடராக வெளியானது “விடாது கருப்பு”. வாரம் ஒருமுறை ஒளிபரப்பப்படும் இந்த தொடரை காண அன்று தமிழகமே காத்து கிடந்தது. அதில் வரும் திகில் காட்சிகளை கண்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயந்து ஓடுவார்கள்.

மர்ம தேசம் என்ற பெயரில் திகில், அமானுஷ்ய தொடர்களை அப்போது டிவிக்களில் ஒளிபரப்பி வந்தார்கள். அவற்றில் பிரபலமான ஒன்றுதான் “விடாது கருப்பு”.

இயக்குனர் கே.பாலசந்தரின் மின்பிம்பங்கள் தயாரித்த இந்த தொடரை இயக்கியவர் ”ஆனந்தபுரத்து வீடு” படத்தின் இயக்குனர் நாகா. சேத்தன், பூவிலங்கு மோகன், தேவதர்ஷினி, பொன்வண்ணன் ஆகிய டி.வி தொடர் நடிகர்களுக்கு மிகப்பெரும் ரசிக வட்டத்தை ஏற்படுத்தியது “விடாது கருப்பு”.

தோட்டக்காரமங்கலம் என்னும் சிறு கிராமத்தில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களையும், சில புதிரான புராண விஷயங்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்த தொடரை பற்றி அன்று பேசாதவர்களே இல்லை. இப்போதும் மிகப்பெரிய திரைப்பிரபலங்களுமே இந்த தொடர் குறித்து மிகவும் சிலாகித்து பேசுவார்கள்.

சமீப காலமாக “விடாது கருப்பு” தொடரை பற்றி பலரும் பேச தொடங்கியிருந்ததால் அதை மறு ஒளிபரப்பு செய்ய கவிதாலயா முடுவெடுத்துள்ளனர். மின்பிம்பங்கள், கவிதாலயா தயாரிப்பில் உருவான டி.வி தொடர்களை தங்களது அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலில் பதிவேற்றியுள்ளனர். பலரும் “விடாது கருப்பு” தொடரை வேண்டும் என்று கேட்டதால் அதையும் தங்களது சேனலில் பதிவேற்றியுள்ளார்கள்.

விடாது கருப்பு தொடரின் அனைத்து எபிசோடுகளும் அங்கே காணலாம். இதனால் உற்சாகமடைந்த பலர் அதை பார்த்தும், தங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்தும் வருகின்றனர். விடாது கருப்பு தொடருக்கு தற்போதுள்ள நவீன பாணியில் ஒரு மோஷன் போஸ்டரையும் தயாரித்துள்ளார்கள்.