1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By K.‌P. Vidyadaran
Last Updated : வியாழன், 16 அக்டோபர் 2014 (15:23 IST)

கடகம் - ஐப்பசி மாத ராசி பலன்கள்

வரப்புயர நீர் உயர்வது போல் நாடு உயர நாம் உயர்வோம் என்ற தேசியச் சிந்தனை உள்ளவர்கள் நீங்கள் தான். உங்கள் ராசிக்கு பிரபல யோகாதிபதியான செவ்வாய் 6-ல் அமர்ந்திருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். தள்ளிப் போன விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகும். எதிர்பாராத பணவரவு உண்டு. சிலருக்கு ஷேர் மூலமாக பணம் வரும். சகோதரங்கள் ஆதரவாகப் பேசுவார்கள்.

உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வீடு அமையும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். ஜென்ம குரு நடைபெறுவதால் முடிந்த வரை சைவ உணவுகளை உட்கொள்வது நல்லது. தூக்கம் குறையும். வேலைச்சுமை அதிகமாகும். உங்களைப் பற்றிய வதந்திகளும் அதிகரிக்கும். அவ்வப்போது சோர்வடைவீர்கள். 20-ந் தேதி முதல் சுக்ரன் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள்.

தண்ணீர் வசதி, நல்ல காற்றோட்டமுள்ள வீட்டிற்கு மாறும் முயற்சியில் இறங்குவீர்கள். தாயாருடன் இருந்த மனத்தாங்கல் விலகும். அவரின் உடல் நிலை சீராகும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஆனால் அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உங்கள் தனாதிபதியான சூரியன் சனியுடன் நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும்.

வியாபாரம் சூடுபிடிக்கும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உணவு, கட்டுமானப் பொருட்கள் மூலமாக லாபம் அதிகரிக்கும். கல்வித் தகுதி, அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை நம்பி பெரிய முடிவுகள் எடுப்பார்கள். உங்களிடம் சில பொறுப்புகளையும் ஒப்படைப்பார்கள். கலைத்துறையினரே! கடின உழைப்பாலும், விட்டுக் கொடுத்து செல்வதாலும் இலக்கை எட்டிப் பிடிக்கும் மாதமிது.