புளியங்கொம்பாக பிடித்த முருகதாஸ்… உலகநாயகனுக்கு கதை சொல்லி சம்மதம்!
இயக்குனர் முருகதாஸ் கமல்ஹாசனுக்கு ஒரு கதை சொல்லி சம்மதம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார். ஆனால் அவர் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்த நிலையிலும், சம்பளம் விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டுமென நினைத்த இப்போது தனது அடுத்த படத்துக்காக பல கதாநாயகர்களிடம் கதை சொல்லி வருகிறாராம். ஆனால் ஒரு காலத்தில் அவர் படத்தில் நடிக்க ஏங்கிய நடிகர்கள் எல்லாம் இப்போது தயக்கம் காட்டுகின்றனராம்.
இந்நிலையில் இப்போது முருகதாஸ் நடிகர் கமல்ஹாசனுக்கு ஒரு கதை சொல்லி அதில் நடிக்க அவரிடம் சம்மதம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. தர்பார் படத்தின் தோல்வியால் வாய்ப்புகளை இழந்த முருகதாஸ் எப்படியாவது கமலை வைத்து ஹிட் கொடுத்து விடவேண்டும் என உறுதியாக இருக்கிறாராம்.