வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : வெள்ளி, 19 மே 2017 (13:11 IST)

மடையர்கள் கூட்டத்தில் மா மடையர் தான் ராஜா..

துரோகிகள் நம்மை விட்டு பிரிந்தாலும் அவர்கள் செய்த துரோகங்களின் மிச்சம் நம்மில் இருக்கும். அது போல தான் கடந்த ஐந்து  நாட்களாக, திருவாளர் ரஜினியும், அவரது ரசிகர்களுக்கும் இடையான சந்திப்பு, அதை ரஜினி அரசியலுக்கு வ்ருவாரா? இல்லையா என்று மீடியாக்கள் விவாதித்த விதம்  நமக்கு ஒரு முட்டாள்தனத்தையும், மடத்தனத்தையும் விட்டு சென்று இருக்கிறது.  


 
 
ஏன் இந்த ரசிகர்கள் கூட்டம் தங்களது தலைவனை திரையில் தேடுகிறது? 
 
பாபா படம் ரிலீஸ் ஆன போது ரசிகர்கள் தங்களது நெற்றியில் முட்டாள் என்று எழுதி கொள்ளட்டும் என ஐயா ராமதாஸ் சொன்னது என் ஞாபகத்திற்கு  வருகிறது. 1996 தேர்தலின் போது ஆச்சி மனோரமா  உங்களுக்கு இவரெல்லாம் ஒரு வழிகாட்டியா?  என்று விமர்சனம் செய்தது  என் ஞாபகத்திற்கு  வருகிறது.
 
ஏசுவும்! ரஜினியும் !
 
என்ன மாயம் செய்தாரோ மந்திரம் செய்தாரோ? ஏசுவே மண்ணுலகிற்கு இறங்கி வந்தது போல இருந்தது என்று ஒரு ரசிகர் பூரிக்கிறார். ரஜினி என்ன மனித புனிதரா? இல்லை தேவ தூதனா ? என்ன மாற்றங்களை இவர் கொண்டு வந்தார் இங்கே? 
 
பச்சை தமிழனும், பகட்டு தமிழனும்
 
தன்னை பச்சை தமிழன் ஆக்கியது என ரசிகர்கள் தான் பூரிக்கும் ரஜினி, நாற்பத்தி நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் தான் இருக்கிறேன் என்று மார் தட்டும் ரஜினி, தமிழகத்தின் சமூக மாற்றகளில் அவரது பங்கு என்ன என்று சொல்ல முடியுமா? காவேரி, முல்லை பெரியார், விவசாயிகள் பிரச்சனை என ஏதேனும் பொது வெளியில் தனது கருத்துக்களை பதிவு செய்து இருப்பாரா திருவாளர் ரஜினி? நதி நீர் இணைப்பு குறித்து பேசியது எல்லாம் போயே   போச்சு. நேற்று கூட முள்ளி வாய்க்கால் படுகொலை முற்றம் பற்றிய கேள்விகளை தவிர்த்து இருக்கிறார் திருவாளர் ரஜினி. 


 

 
 
எதிர்ப்புதான் மூலதனம்: 
 
அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம் என சொல்லும் நீங்கள் ரசிகர்களின் மடமையை மூலதனம் ஆக்கி அரசியல் செய்ய நினைக்கிறீர்களா திருவாளர் ரஜினி? அரசியலுக்கு வந்தால் பெரியார் பாதை தான் என்று சொல்லும் ரஜினி  அவர்களே! பாபா பாதை என்ன ஆனது சொல்லுகள்.  
 
கட்சிகள் சரி இல்லை தான், சிஸ்டம் சரி இல்லை தான், ஆனால் நீங்கள் அடைய நினைக்கும் இடம் உங்களின் பேராசையை காட்டுகிறது. ஜெயலலிதாவின் மரணப்படுக்கையும், கருணாதியின் சுகவீனப்  படுக்கையும்  உங்களை  இந்த நிலைக்கு தள்ளி இருக்கிறது. 


 
 
1996 தேர்தலில் உங்களின் ஆதரவு ஒரு அரசியல் விபத்து என்கிறீர்கள்.  ஆனால், நீங்கள் திமுக - தாமாக கூட்டணியை ஆதரிக்காவிட்டாலும், மக்கள் மீது இருந்த வெறுப்பு உணர்வு காரணமாக தி மு க - தா மா க கூட்டணியை தேர்தெடுத்து  இருப்பார்கள். மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று சொன்ன நீங்கள் தான் ஜெயலலிதாவை, வீர லட்சுமி ! தைரிய லட்சுமி என புகழ்ந்த வரலாற்றை தமிழகம் அறியும். 
 
ரஜினியும்,  அவரது ரசிகர்களும்  தாராளமாக அரசியலுக்கு வரலாம். ஆனால், அதற்கான தகுதிகளை அவர் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பதை தவிர்த்து மக்கள் மன்றத்தில் உங்களின் கொள்கைகளையும்,  தொலைநோக்கு திட்டங்களையும்,  மக்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் மக்கள் மன்றத்தில் வையுங்கள்  திருவாளர் ரஜினி அவர்களே ! 

 
இரா காஜா பந்தா நவாஸ் 
பேராசிரியர்