1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: சனி, 25 மார்ச் 2017 (07:04 IST)

ஆர்.கே.நகரில் விஜய்யின் ஆதரவு யாருக்கு? எஸ்.ஏ.சி விளக்கம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் எனது ஆதரவு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது டுவிட்டரில் ஒரு பதிவை செய்து பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதேபோல் தற்போது இளையதளபதி விஜய் தரப்பில் இருந்தும் இந்த இடைத்தேர்தலில் தனது நிலை என்ன என்று ரசிகர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது.




 


இதுகுறித்து விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி ஒன்றில் கூறியதாவது: 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யை அரசியலுக்கு கொண்டு வர விரும்பினேன். அதில் அதிக ஆர்வம் காட்டினேன். நடிகர் என்பதால் அரசியலில் புகழ் பெற முடியும், அரசியலில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நினைத்தேன். காலப்போக்கில் அரசியல் சுத்தப்படுத்த முடியாத சாக்கடை என்பதை உணர்ந்தேன்.

தற்போது தமிழகத்தில் எப்படிப்பட்ட அரசியல் உள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள். இதுபோன்ற அரசியலை பார்த்தது இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எனது மகன் அரசியலுக்கு வர நான் விருப்பப்படவில்லை. விஜய் அரசியலுக்கு வரமாட்டார்.
விஜய்யின் மக்கள் இயக்கம், அரசியலில் ஈடுபடாததால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காது.