வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (16:39 IST)

அஜித்தின் உதவியாளர் திருடிய கதையே விவேகம் - ஆதாரத்துடன் இயக்குனர் புகார்

நடிகர் அஜித் நடித்து சமீபத்தில் வெளியான விவேகம் படத்தின் கதை தன்னுடையது என சினிமா தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ரவீந்தர் சந்திரசேகர் புகார் தெரிவித்துள்ளார்.


 

 
சுட்ட கதை, நளனும் நந்தினியும் ஆகிய படங்களின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். அவர் தனது முகநூல் பக்கத்தில் ‘துரோகம்’ என்ற தலைப்பில் கூறியிருப்பதாவது:
 
என்னுடைய ‘ஐ.நா’ படத்தின் கதையைத்தான் விவேகம் படமாக எடுத்திருக்கிறார்கள். 2013ம் ஆண்டிலேயே ஐ.நா. படத்தின் கதை எழுதப்பட்டது. அதே ஆண்டில் அஜீத்திற்கு நெருக்கமான ஒருவரிடம் இந்த கதையின் வடிவத்தை கொடுத்தேன். 3 வாரத்தில் அஜித்தை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என அவர் கூறினார். அதன்பின், என்னை தொடர்பு கொண்ட அவர், அறிமுக இயக்குனர் படங்களில் அஜித் நடிக்க மாட்டார். எனவே அவரிடம் கதை சொல்ல முடியாது எனக்கூறினார்.
 
சமீபத்தில் விவேகம் படத்தை பார்த்த போது, படத்தின் 60 சதவீத காட்சிகள் நான் ஏற்கனவே கூறிய கதையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதில் அஜித்திற்கோ, இயக்குனர் சிவாவிற்கோ தொடர்பு இருக்கும் எனத் தோன்றவில்லை. அவர்களை நான் சந்திக்கக்கூட இல்லை. இந்த கதையை விவேகம் படமாக மாற்றி, என்னை அழவைத்தது அஜித்தின் அந்த உதவியாளராகத்தான் இருக்க வேண்டும்.
 
இந்த படத்தின் தொடக்கத்தில் இந்த படத்தில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே என போடுகிறார்கள். ஆனால், என்னுடைய கதையைத்தான் படமாக எடுத்துள்ளனர். அந்த கதையை அஜித்தையும், அவரின் ரசிகர்களையும் மனதில் வைத்தே எழுதினேன். அது முடியாமல் போனதால், வேறு நடிகர்களை வைத்து ஐ.நா என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறேன். அந்த படம் வெளிவர இன்னும் ஒன்றரை வருடங்கள் ஆகும்.


 

 
இந்த கதையை யாரிடமெல்லாம் கூறினேனோ அவர்கள் அனைவரும் என்னை அழைத்து என் கதை திருடப்பட்டது பற்றி அதிர்ச்சியுடன் பேசினார்கள். விளம்பரத்திற்காக இந்த தகவலை நான் கூறவில்லை. என்னைப் போல் எந்த இயக்குனரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இதை பேசுகிறேன். 
 
மூன்று படங்கள் எடுத்த எனக்கே இந்த கஷ்டத்தை கொடுக்கிறார்கள் எனில், புதிதாக வரும் இயக்குனர்களை நினைத்தால் பயமாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் அஜித் தலையிட வேண்டும். நானும் அவரின் ரசிகனே. ஆனால், இது மீண்டும் நடக்கக் கூடாது. 
 
அஜித்தின் உதவியாளர் என்னை தொடர்பு கொண்டு பேச வேண்டும். இல்லையேல் விவேகம் படம் என்னுடைய கதை என்பதை மக்கள் முன் ஆதராத்துடன் வெளியிடுவேன். என் பக்கம் நியாயம் இருப்பதாக தோன்றினால் எனக்கு ஆதரவு கொடுங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.