'டைட்டில் செம! பிரபல நடிகருக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்
இயக்குனர் கே.பாக்யராஜ் மகனும் நடிகருமான சாந்தனு பாக்யராஜ், இரண்டு வருடங்களுக்கு பின் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'மதயானை கூட்டம்' பட இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கும் இந்த படத்திற்கு 'இராவண கோட்டம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு நேற்று தொடங்கியதை அடுத்து, திரையுலகினர் சாந்தனுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்
இந்த நிலையில் தளபதி விஜய் சாந்தனுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து அனுப்பிய வாழ்த்து செய்தியில், 'டைட்டில் செம, வாழ்த்துக்கள் நண்பா! என்று தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து குறித்து தனது டுவிட்டரில் குறிப்பிட்ட நடிகர் சாந்தனு, 'யப்பா... இந்த ஒரு வாழ்த்து எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தது. நன்றி விஜய் அண்ணா.. உங்கள் வாழ்த்தால் நான் மெர்சலாயிட்டேன்' என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் சாந்தனு என்பதும், விஜய்யின் அனைத்து படங்களையும் முதல் நாள் முதல் காட்சி திரையில் பார்த்து தனது கருத்தை சாந்தனு தனது டுவிட்டரில் பதிவிடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இராமநாதபுரம் அருகே உள்ள கிராமத்தில் நடக்கும் கதையம்சம் கொண்ட 'இராவண கோட்டம்' படத்திற்காக சாந்தனு தற்போது தன்னை முழு அளவில் தயார் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது