ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 7 அக்டோபர் 2018 (13:23 IST)

நடிகர் கருணாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி - விஜய் ரசிகர்கள் அடாவடி

நடிகர் விஜய் குறித்து கருத்து தெரிவித்த நகைச்சுவை நடிகர் கருணாகரனுக்கு, விஜய் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டியுள்ளனர்.

 
சமீபத்தில் நடைபெற்ற சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு வழக்கத்திற்கு மாறாக கலகலப்பாக பேசினார். அப்போது அவர் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு குட்டிக் கதை சொல்லி விளக்கினார்.அதைத் தொடர்ந்து நடிகர் கருணாகரன் அந்த கதையை மேற்கோள் காட்டி ’நீங்கள் சொன்ன குட்டி கதை தலைவர்களுக்கு மட்டும்தானா, இல்லை நடிகர்களுக்குமா?’ என டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் கருணாகரனை தரக்குறைவாக விமர்சிக்க ஆரம்பித்தனர். அதற்குப் பதிலளித்த கருணாகரன் ‘இது போன்ற சில ரசிகர்கள் மிக அசிங்கமாக டுவிட்டரில் பேசுவதால் தான் தான் விஜய்யை வெறுக்க ஆரம்பித்துவிட்டதாக ஒரு டிவிட்டைப் பதிவு செய்தார்.
 
அதைத்தொடர்ந்து கருணாகரன் ஆந்திராவை சேர்ந்தவர் என்றும் அவர் ஒரு தமிழர் இல்லை என்றும் விஜய் ரசிகர்கள் தாக்க ஆரம்பித்தனர். இதற்குப் பதிலளித்த கருணாகரன் தான் தமிழன்தான் என்றும் தான் பிறந்தது ஆவடியில்தான் என்றும் விளக்கமளித்தார்.
 
ஆனாலும் விடாத விஜய் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் அதையே சொல்லி வந்தனர். அதனால் கோபமடைந்த கருணாகரன் ‘முட்டாள்தனமான கேள்விகளைக் குழந்தைகள் போல திரும்ப திரும்ப கேட்காதீர்கள், சர்கார் என்ற வார்த்தை மட்டும் தமிழ் மொழியா?. என்னுடைய அடுத்த கேள்வி எனது தாய்மொழியில்தான் வரும் அதற்குத் தயாரா சர்கார் அடிமைகளே’ என கோபமாக பதில் தெரிவித்தார்.
 
இந்த மோதல் போக்கு தொடர்ந்த நிலையில், விஜய் ரசிகர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இந்தப் புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.
 
இதற்கு கருணாகரன் என்ன பதில் சொல்லப் போகிறாரோ தெரியவில்லை.