அட்லி இயக்கத்தில் புதுப்படம் - பூஜைக்கு வேட்டி சட்டையில் வந்த விஜய்
அட்லி இயக்கவுள்ள புதுப்படத்தின் பூஜைக்கு நடிகர் விஜய் வேட்டி சட்டையில் வந்து கலந்து கொண்டார்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வந்த புலி முடிந்த நிலையில் அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இந்தப் படத்தின் பூஜை இன்று காலை சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள கேரள ஹவுஸில் நடந்தது.
எளிமையாக நடந்த இந்த விழாவுக்கு விஜய் வேட்டி சட்டையில் வந்தார். அட்லி, அவரது மனைவி, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், அம்மா ஷோபா, நடிகர்கள் பிரபு, நடிகை ராதிகா, தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், அபிராமி ராமநாதன், அட்டகத்தி ரஞ்சித் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவரையும் படத்தின் தயாரிப்பாளர் தாணு வரவேற்றார்.
விஜய்யின் 59 -வது படமான இதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. புரொடக்ஷன் நெ.33 என க்ளாப் கட்டையில் போடப்பட்டிருந்தது. பூஜையை தொடர்ந்து சம்பிரதாயமாக சில காட்சிகள் படமாக்கப்பட்டது.
இந்த விழாவுக்கு ஆகாய வண்ண நீலச் சட்டை மற்றும் வேட்டியில் வந்திருந்தார் விஜய்.