“இதெல்லாம் திரைத்துறைக்கே நல்லது கிடையாது..” இயக்குனர் வெற்றிமாறன் ஆதங்கம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவின் சமீபத்தைய ரிலீஸாக அவரின் 75 ஆவது படமான அன்னபூரணி திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நயன்தாராவோடு ஜெய், சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்கி இருந்தார்.
இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்களே வந்தன. இதையடுத்து சமீபத்தில் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆனதை அடுத்து வட இந்தியாவில் சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சியில் ஜெய் நயன்தாராவிடம் “ராமர் கூட அசைவ உணவு சாப்பிட்டுள்ளார்” என்று பேசுவது போல இருக்கும். மேலும் ஒரு அர்ச்சகரின் மகளான நயன்தாரா நமாஸ் செய்வது போலவும் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.
இந்த காட்சிகளைக் குறிப்பிட்டு இந்த மதத்தில் இந்து மதத்தின் புனிதங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சிவசேனா பிரமுகர் ரமேஷ் சோலான்கி என்பவர் மும்பையில் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்டுடியோஸ் வருத்தம் தெரிவித்து சம்மந்தப்பட்ட காட்சிகளை நீக்கவுள்ளதாகவும் அதுவரை படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்படும் எனவும் அறிவித்தது. சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தை இப்படி மிரட்டி ஓடிடி தளத்தில் இருந்து நீக்குவது கண்டனத்துக்குரியது என குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் “இந்தியாவில் சென்சார் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என எதுவும் இல்லை. இது ஓடிடிகளுக்கும் பொருந்தும். தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை அழுத்தம் கொடுத்து ஓடிடியில் இருந்தே நீக்கவைப்பது திரைத்துறைக்கே நல்லதல்ல. ஒரு படத்தை அனுமதிப்பதற்கும் தடை செய்வதற்கும் சென்சார் போர்டுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இத்தகைய நிகழ்வுகளே தணிக்கைக் குழுவின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தும்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.