பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ‘வேலைக்காரன்’ திரையிடல்
பள்ளி மாணவர்கள் இலவசமாக ‘வேலைக்காரன்’ படத்தைப் பார்க்கும் வகையில் திரையிட உள்ளனர். சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படம் கடந்த மாதம் 22ஆம் தேதி ரிலீஸானது. இந்தப் படத்தைத் தயாரித்த 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “வேலைக்காரன் திரைப்படத்திற்கு நீங்கள் கொடுத்த பெருவெற்றிக்கும், பேராதரவிற்கும் முதல் நன்றி. வெற்றியோடு மக்களுக்கான நல்ல கருத்தை முன்னெடுத்துச் சென்றதில் மிக்க மகிழ்ச்சி. இந்த வெற்றிக்கு உறுதுணையாய் நின்று அடித்தளமிட்ட அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் திரைத்துறையின் 24 அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து தொழிலாள நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
‘வேலைக்காரன்’ படத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட உணவுப் பிரச்னையின் ஆழத்தையும், முக்கியத்துவத்தையும் மாணவர்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்களின் விருப்பத்தையும், வற்புறுத்தலையும் ஏற்று, ‘வேலைக்காரன்’ படத்தைப் பள்ளி மாணவர்கள் பார்ப்பதற்கு ஏற்றவாறு சில காட்சிகளை நீக்கிவிட்டு, இலவசமாகத் திரையரங்குகளில் பிப்ரவரி 1 முதல் 15 வரை திரையிட முடிவு செய்துள்ளோம்.
பள்ளி நிர்வாகத்தினர் எங்களைத் தொடர்பு கொண்டால், பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் திரையரங்குகளில் படத்தைத் திரையிட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உதவியோடு ஆவன செய்யத் தயாராக உள்ளோம்” என கூறப்பட்டுள்ளது.