திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (09:42 IST)

20 நாளில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா 10 நாளில் சூட்சகன்!

தமிழ் திரையுலகில் புதுமுக கலைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கும் படைப்புகளுக்கு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைப்பதுண்டு. அந்த வகையில் அறிமுக நடிகர் சுந்தர் மகாஸ்ரீ கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'வாங்கண்ணா வணக்கங்கண்ணா'  திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.  
 
இதனை முன்னாள் மத்திய இணை அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சு திருநாவுக்கரசர் வெளியிட, அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான எம். கே. மோகன் பெற்றுக்கொண்டார்.
 
இந் நிகழ்வின்  போது திரைப்பட தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், 'டாடா' படத்தின் இயக்குநர் கணேஷ் பாபு, 'லொள்ளு சபா' ஜீவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
 
அறிமுக இயக்குநர் ராஜ் கண்ணாயிரம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வாங்கண்ணா வணக்கங்கண்ணா'  திரைப்படத்தில் செந்தில் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். 
 
இவருடன் அறிமுக நாயகன் சுந்தர் 
மகாஸ்ரீ, அபிநயாஸ்ரீ,சந்தியா பாலசுப்பிரமணியன்,பாலா,நதியா வெங்கட், பிரபு, சன்னி  பாபு, மின்னல் ராஜா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
 
இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி உள்ள நிலையில்.படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கமலா திரையரங்கத்தில்  நடைபெற்றது. 
 
இந் நிகழ்வில் தயாரிப்பாளர் லட்சுமணன் பேசுகையில்,
 
''வாங்கண்ணா வணக்கங்கண்ணா படத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் பணிகளை நிறைவு செய்வதற்கு கடும் சவால்கள் இருந்தாலும் அனைத்தையும் எதிர்கொண்டு படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறோம். விரைவில் படத்தையும் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்
 
நல்லதொரு கருத்தை நகைச்சுவையாக சொல்லி இருக்கிறோம். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து எங்களுக்கு ஆதரவுத் தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். 
 
தயாரிப்பாளர் யாஸ்மின் வேகம் பேசுகையில், 
 
இது எனக்கும், எனது கணவருக்கும் முதல் மேடை. இந்தப் படத்தின் கதையின் நாயகனாக நடித்திருக்கும் சுந்தர் மகாஸ்ரீ எனது கணவர் தான்.‌ நாங்கள் இருவரும் திரைத் துறையில் ஜூனியர் ஆர்டிஸ்டிகளாகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினோம். அதன் பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். பிறகு ஒரு புள்ளியில் நான் நடிப்பதை விட்டுவிட்டு வேலைக்குச் செல்லத் தொடங்கினேன். ஆனால் சுந்தர் சினிமா தான் மூச்சு என வாழ்ந்தார். நடிகராக நடிக்க தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தார். அதன் பிறகு கதை எழுதுவது. திரைக்கதை உருவாக்குவது. படத்தை இயக்குவது.. வசனம் எழுதுவது.. படத்தை தொகுப்பது. என ஒரு படத்தினை உருவாக்குவதற்கான அனைத்து வேலைகளையும் கற்று தேர்ந்தார். அதன் பிறகு கதை எழுதி ஒவ்வொரு கம்பெனியாக ஏறி வாய்ப்பு கேட்டார். கதை கேட்ட நிறுவனங்கள் காத்திருக்க சொல்லியது. வருடங்கள் ஓடியது. இதனால் எங்களுக்குள் சண்டையும் ஏற்பட்டது.  
 
பிறகு படத்தை சிறிய முதலீட்டில் தொடங்க திட்டமிட்டோம். இதற்கு நானும், எனது மாமியாரும் முழு ஆதரவு அளித்தோம்.  அதன் பிறகு திட்டமிட்டபடி இந்த திரைப்படத்தை இருபது நாளில் படப்பிடிப்பை நிறைவு செய்தோம்.
 
இதற்காக கடுமையாக உழைத்த ஒட்டுமொத்த பட குழுவினருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 
 
படத்தின் பணிகளை தொடங்கும் போதே இதனை நாம் மட்டுமே நிறைவு செய்திட இயலாது என எண்ணிக் கொண்டிருந்தபோது.. தயாரிப்பாளர் லட்சுமணன் எங்களுக்கு அறிமுகமானார். அவரும் கதையைக் கேட்டவுடன் உடனடியாக ஒப்புக்கொண்டு படத்தை தயாரிக்க சம்மதம் தெரிவித்தார்.
 
இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் பிரத்யேக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
படத்தின் இயக்குநர் ராஜ் கண்ணாயிரம் பேசுகையில், 
 
இந்த படத்தின் தயாரிப்பாளர்களும், ,நாயகனும், நண்பனுமான சுந்தர் மகாஸ்ரீ எனக்கு அழைப்பு விடுத்து இந்த படத்தை இயக்கி தாருங்கள் என கேட்டார். சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் யூட்யூபர் ஒருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்படுகிறது.அதன் பின் சட்டமன்ற உறுப்பினரின் கோபத்திற்கு யூட்யூபர் ஆளாகிறார். 24 மணி நேரத்திற்குள் அந்த யூட்யூபர் தப்பினாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.இந்த படத்தில் செந்தில் மட்டும் தான் அனைவருக்கும் தெரிந்த நட்சத்திர நடிகர்.அவர் எம்எல்ஏவாக நடிக்கிறார்.  அவர்தான் கதையின் நாயகன்.மற்ற அனைவரும் புதுமுகங்கள் தான். இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. இப்போது இந்தப் படத்தின் முன்னோட்டத்தையும் பாடல்களையும் பார்த்திருப்பீர்கள். விரைவில் இந்த 'வாங்கண்ணா வணக்கங்கண்ணா' திரையரங்கில் வெளியாகும். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
 
நடிகை அபிநயாஸ்ரீ பேசுகையில், 
 
புதுக்கோட்டையை அடுத்துள்ள சின்ன கிராமத்தில் பத்தாவது படிக்கும் போது டியூஷனுக்கு செல்கிறேன் என்று சொல்லி உள்ளூர் சேனல் ஒன்றில் தொகுப்பாளனியாக பணியாற்றினேன்.  கடும் ஊர் கட்டுப்பாடுகளையும் மீறி வி ஜே வாக தொடர்ந்தேன். அத்துடன் பத்தாவது... பன்னிரண்டாவது... நிறைவு செய்த பிறகு பொறியியல் பட்டதாரியாகி,  தனியார் நிறுவனத்தில் இரண்டரை ஆண்டு காலம் பணியாற்றினேன். நல்ல சம்பளம் ஆரோக்கியமான பணிச்சூழல் இருந்தாலும் .. அதையெல்லாம் விட்டுவிட்டு எனக்கு பிடித்த மாதிரி நடிப்பை தேர்வு செய்து நடிக்க தொடங்கினேன். 
 
சினிமாவில் வருமானமும், வாய்ப்பும் ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும். இருந்தாலும் விடாப்பிடியாக சின்ன வயது கனவை துரத்திக் கொண்டே இருந்தேன்.‌ கொரோனா காலகட்டத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்ற வாய்ப்பு கிடைத்த போது.கிடைத்த ஓய்வு நேரத்தில் தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகளை தேடிக்கொண்டே இருந்தேன். சின்னத்திரை தொடர்களில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நடிக்க தொடங்கினேன். மக்கள் டிவி, விஜய் டிவி, தற்போது ஆதித்யா டிவியில் தொகுப்பாளனியாக பணியாற்றி வருகிறேன். 
 
இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்ததற்காக இயக்குநருக்கும், நாயகனுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றிகள். இந்தப் படத்தில் பணியாற்றிய போது எனக்கும் ஹீரோவுக்கும் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. ஆனால் அது குறித்து பிறகு சிந்தித்துப் பார்த்தபோது நான் செய்த தவறுகளை உணர்ந்து, படக் குழுவினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினேன். இந்தப் படம் இவ்வளவு வேகமாக நிறைவடைந்து திரைக்கு வரும் என்று நினைக்கவே இல்லை. இதற்காக உழைத்த ஒட்டுமொத்த குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 
ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆணாக இருந்தாலும் சரி.பெண்ணாக இருந்தாலும் சரி. உங்களுடைய கவனம் +விருப்பம் எதில் இருக்கிறதோ. அதற்கு மட்டுமே முன்னுரிமையும், முக்கியத்துவமும் கொடுங்கள். உங்களைப் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் வரும். அதனைப் புறக்கணித்துவிட்டு, தொடர்ந்து முன்னேறுங்கள்.‌
 
முன்னாள் மத்திய அமைச்சர் 
சு .திருநாவுக்கரசர் பேசுகையில்,
 
''பொன்மனம் பிலிம்ஸ் என்ற பெயரில் நானும் இரண்டு திரைப்படங்களை தயாரித்தேன். ஒன்றில் கதை திரைக்கதை எழுதினேன். மற்றொன்று ஹீரோவாக நடித்தேன். நடிப்பு வரவில்லை அதனால் படத்தை தொடர்ந்து தயாரிக்கவில்லை. புரட்சித்தலைவர் எம்ஜிஆர், கேப்டன் விஜயகாந்த் ஆகியோரின் பட நிறுவனத்தில் சாப்பாடு நன்றாக பரிமாறுவார்கள் என்று பலரும் செல்வதுண்டு. இதனால் நான் படத்தை தயாரிக்கும் போது சாப்பாடு விசயத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை போல் தாராளமாக செலவு செய்தேன். அதனால் என்னுடைய  பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் சாப்பாடு விசயத்தில் நல்ல பெயர் கிடைத்தது. 
 
சினிமாவில் எல்லாரும் நடிகர்கள் தான். அரசியலிலும் எல்லோரும் நடிகர்கள்தான்.‌ யோக்கியனாக வேசம் போடுபவர்கள் பலரும் அயோக்கியனாக இருக்கிறார்கள். அயோக்கியனாக இருப்பவர்கள் நெருங்கி பழகும் போது யோக்கியனாக இருக்கிறார்கள்.‌ அதனால் சினிமாவிலும், அரசியலிலும் நல்லவர்கள். கெட்டவர்கள்.என பலரும் உண்டு.‌ 
 
மக்கள் பிரதிநிதிகளை சினிமாவில் எப்படி வேண்டுமானாலும் காண்பிக்கலாம். நல்லவனாகவும் காட்டலாம். கெட்டவனாகவும் காட்டலாம். காமெடியனாகவும் காட்டலாம். இப்போதெல்லாம் வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பணம் தரவில்லை என்றால்..அவர்களை நேரில் சந்தித்து மிரட்டி கேட்கிறார்கள். 
 
எந்த கட்சி என்றில்லை. அரசியலில் போட்டியிடும் அனைத்து கட்சியிலும். வாக்காளர்கள் திறமையாக பேசி வாக்களிக்க பணம் வாங்கிக் கொள்கிறார்கள்.‌
 
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த படங்களில் பாடல்களாகட்டும் .. வசனங்களாகட்டும்.. அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களாகட்டும்... அனைத்திலும் ஒரு மெசேஜ் இருக்கும்.‌ சினிமா ஒரு பொழுதுபோக்கு தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. படம் முழுக்க மெசேஜ் இருந்தால் படம் ஓடாது. படம் என்றால் பாட்டு இருக்க வேண்டும். நடனம் இருக்க வேண்டும். சண்டைக் காட்சிகள் இருக்க வேண்டும். நகைச்சுவை காட்சிகள் இருக்க வேண்டும். இப்படி அனைத்தும் இருந்தால்தான் அது  சினிமா. அதனுடன் படத்தில் பேசப்படும் வகையில் மையக் கருத்து ஒன்றும் இருக்க வேண்டும். அந்தக் கதையில் ஏதேனும் ஒரு இடத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் ஒரு மெசேஜ் இடம்பெறவேண்டும்.  இரண்டரை மணி நேர சினிமாவில் இரண்டரை நிமிசமாவது ஒரு மெசேஜ் இருக்க வேண்டும்.  மக்களை நல்வழிப்படுத்தும் வகையில் காட்சியாகவோ.. பாடல்களிலோ.. ஏதேனும் ஒரு மெசேஜ் இருக்க வேண்டும். அந்தப் படம் தான் எப்போது வெற்றி பெறும். 
 
தற்போதுள்ள சூழலில் மக்களும் மாற வேண்டும். சினிமாவும் மாற வேண்டும். அரசியல்வாதிகளும் மாற வேண்டும். எல்லாரும் ஒன்றிணைந்து மக்களை மகிழ்விக்க வேண்டும். மக்களை நல்வழி படுத்த வேண்டும். 
 
மக்கள் சந்தோஷத்தை மட்டும் ரசிப்பதில்லை. சோகத்தையும் ரசிக்கிறார்கள். அதனால் மக்கள் எல்லா படத்தையும் பார்ப்பார்கள். ஒரு கதை எப்படி ரசிகர்களுக்கு கொடுக்கப்படுகிறது என்பது தான் முக்கியம். இந்தப் படம் ரசிகர்களுக்கு நல்லதொரு கதையை நகைச்சுவையாக சொல்லி இருக்கும் என நம்புகிறேன். 
 
படத்தின் டைட்டில் கேட்சிங்காக இருக்கிறது.  ஒரு படத்தில் விஜய் பாடிய பாடலை தலைப்பாக வைத்திருக்கிறார்கள்அதனால் இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும் உறுதியாக நம்புகிறேன். 
 
வெற்றி பெற வேண்டுமென மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். '' என்றார். 
 
படத்தின் நாயகன் சுந்தர் மகாஸ்ரீ பேசுகையில், 
 
இந்த மேடையில் என்னுடைய அடுத்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறேன். இதற்காக நல்ல மனம் படைத்த சமூக நல சேவகர் புகழேந்தியை மேடைக்கு அழைக்கிறேன். இந்தப் படத்திற்கு 'சூட்சகன்' என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை ஸ்டாலின் இயக்குகிறார். தயாரிப்பாளர் சயீத் தயாரிக்கிறார். 
 
'வாங்கண்ணா வணக்கங்கண்ணா' படம் காமெடி படம் மட்டுமல்ல நல்லதொரு கருத்தும் இருக்கிறது. நான் பார்த்து உணர்ந்த வகையில் எங்கும் சாலை வசதி சரியாக இல்லை. குண்டும் குழியுமாகத்தான் இருக்கிறது. ஒரு எம்எல்ஏவாக இருப்பவரை உச்ச கட்ட காட்சியில் சாலையில் நடக்க வைத்து சாலைகள் உள்ள குண்டும் குழிகளால் உண்டாகும் தர்ம சங்கடங்களை அவருக்கு உணர்த்தும் படம் தான் இது. அவரை சாலையில் நடக்க வைத்து.. நடக்கும் போது ஏற்படும் அசௌகரியங்களை காட்சிப்படுத்துவது தான் இப்படத்தின் நோக்கம். அதன் பிறகு மக்களுக்கு சாலை வசதி முக்கியம் என்பதை எப்படி ஒரு எம்எல்ஏ உணர்கிறார் என்பது தான் கதை. 
இதற்கு  காமெடியாகவும், பொழுது போக்காகவும் தான் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.‌ இந்த படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும் மக்கள் வீட்டிற்கு பயணிக்கும் போது சாலைகளை ஒரு முறை பார்ப்பார்கள் என்பது உறுதி. அதுவே இந்த படத்திற்கு கிடைக்கும் வெற்றி.
 
நடிகை சந்தியா பாலசுப்பிரமணியன் பேசுகையில்,
 
இது என்னுடைய முதல் படம். எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. சிறிய வயதிலேயே செந்தில் -கவுண்டமணி கூட்டணியின் நகைச்சுவையை பார்த்தும், கேட்டும் ரசித்திருக்கிறோம். அந்தக் கூட்டணியில் உள்ள செந்தில் ஐயாவுடன் நான் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. அந்த அற்புதமான தருணத்தை உருவாக்கியதற்காக படக்குழுவினருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். '' என்றார்.