1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (10:48 IST)

வைரமுத்துவின் காதலர் தினப் பரிசு – காதல் , காமம் ததும்பும் வர்மாப் பாடல் !

பாலா இயக்கத்தில் முழுமையாகத் தயாராகி பின்பு தயாரிப்பாளர்களுக்குத் திருப்தித் தராததால் தூர வீசப்பட்ட வர்மா படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது.

அறிவிக்கப்பட்டப்படி வெளியாகியிருந்தால் இன்று வர்மாப் படத்திற்கு இர்ண்டாம் நாள் கொண்டாட்டமாக இருந்திருக்கும். ஆனால் தயாரிப்புத் தரப்பு மற்றும் பாலாவிற்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலால படம் தூர வீசப்பட்டுள்ளது.

அதையடுத்து மீண்டும் துருவ் விக்ரமை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு செய்து புது இயக்குனர் மூலம் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். படத்தை கௌதம் மேனன் இயக்கலாம் எனத் தெரிகிறது. இதையடுத்து வர்மாப் படத்திற்காக பாடலாசிரியர் வைரமுத்து எழுதிய பாடல் ஒன்றின் வரிகள் நேற்று இணையதளத்தில் வெளியாகின.

காதலர்கள் இருவரும் முதல்முறையாக தடைகளை மீறி உடலாலும் மனதாலும் இணைகிற இடத்தில் இடம்பெறும் படியாக உருவாக்கப்பட்ட காதல் பாட்டில் காதலும் அதைவிட அதிகமாகக் காமமும் பொங்கி வழியும் படி வைரமுத்து இந்த பாடலை உருவாக்கி உள்ளார். ஆனால் துளியும் ஆபாசம் இல்லாமல் உள்ளது அவரது வரிகள் :-

மழையில்லை மேகமில்லை – ஆயினும்
மலர்வனம் நனைகின்றதே
திரியில்லை தீயுமில்லை – ஆயினும்
திருவுடல் எரியுண்டதே
ஒருவரின் சுவாசத்திலே
இருவரும் வாழுகின்றோம்
உடல் என்ற பாத்திரத்தில்
உயிர்ப்பொருள் தேடுகின்றோம்
காற்றில் ஒலிபோலே
கடலில் மழைபோலே
இருவரும் ஒருவரில் ஒன்றினோம்
*
பூக்கள் ஒன்றுதிரண்டு
படைகூட்டி வருவதுபோல்
இன்பம் ஒன்றுதிரண்டு
என்மீது பாய்கிறதே
என் ஆவி பாதி குறைந்தால்
என் மேனி என்னாகும்?
ஆகாயம் அசைகிறபோது
விண்மீன்கள் என்னாகும்?
தரையில் கிடந்தேனே
தழுவி எடுத்தாயே
தலைமுதல் அடிவரை நிம்மதி
*
பண்ணும் தொல்லைகளெல்லாம்
துன்ப வாதை செய்கிறதே
இன்னும் தொல்லைகள் செய்ய
பெண்ணின் உள்ளம் கெஞ்சியதே
திறக்காத ஜன்னல்கள் எல்லாம்
திடுக்கிட்டுத் திறக்கிறதே
எனக்குள்ளும் இத்தனை அறையா
எனக்கின்று புரிகிறதே
மழையில் தலைசாயும்
இலையின் நிலைபோல
எனதுயிர் உன்வசம் ஆனதே.