ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 21 செப்டம்பர் 2024 (08:47 IST)

பாட்ஷா படத்துக்கு நான் கேட்ட சம்பளம்… அவர்கள் கொடுத்த சம்பளம்… பழைய நினைவுகளைப் பகிர்ந்த வைரமுத்து!

தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலத்தில் கோலோசிய பாடல் ஆசிரியராக இருந்தவர் வைரமுத்து. ஆனால் சமீபகாலமாக அவருக்கு பாடல் வாய்ப்புகள் அதிகமாக வருவதில்லை. அதற்கு வைரமுத்து பாடகி சின்மயியால் மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளானதும் ஒரு காரணம். இதன் காரணமாக ஏ ஆர் ரஹ்மான் மற்றும் மணிரத்னம் ஆகியோர் அவரை விட்டுப் பிரிந்தனர்.

அதனால் அவர் இப்போது இலக்கியம், தனி ஆல்பம் போன்றவற்றில் பிஸியாக இருக்கிறார்.  இதற்கிடையில் அவர் முகநூலிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். அடிக்கடி சமூகவலைதளங்களில் பதிவுகளை இட்டு வரும் அவர், பாட்ஷா படத்திற்கு பாடல் எழுதிய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

இது சம்மந்தமான அவரது முகநூல் பதிவில் “பாட்ஷா படத்திற்குப் பாட்டெழுத அழைத்தார்கள் ‘உங்களுக்கு எவ்வளவு  சம்பளம்’ என்றார் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன். ‘முழுப்படத்துக்கு 50ஆயிரம்’ என்றேன். அதிர்ச்சியானவர் நாற்காலியைவிட்டு அரை அடி பின்வாங்கினார்.
‘பாடலாசிரியருக்கு இவ்வளவு பணமா? நாங்களெல்லாம் ஒருபாட்டுக்கு 500 முதல் 1000 வரை தருவதுதான் வழக்கம்’ என்றார். ‘இப்போது நான்வாங்கும் ஊதியத்தைச் சொல்லிவிட்டேன்; அப்புறம் உங்கள் முடிவு’ என்றேன்.

‘பாடல் எழுதுங்கள்; பார்க்கலாம்’ என்றார். எல்லாப் பாடலும்  எழுதி முடித்தவுடன் நான் கேட்டதில் 5ஆயிரம் குறைத்துக்கொண்டு 45ஆயிரம் கொடுத்தார். நான் பேசாமல் பெற்றுக்கொண்டேன். வெளியானது ‘பாட்ஷா’; வெற்றியும் பெற்றது. படத்தின் வெற்றியில் பாட்டுக்கும் பங்குண்டு என்று பேசப்பட்டது.

ஒருநாள் நாகேஸ்வர ராவ் பூங்காவில் பாட்டெழுதிக்கொண்டிருந்தேன் அந்தப்பக்கம் சென்ற கார் ஒன்று என்னைக் கண்டு நின்றது காரிலிருந்து இறங்கி வந்தவர் ‘வீட்டுக்குப் போகும்போது ஆர்.எம்.வீ ஐயா உங்களை அலுவலகம் வந்துபோகச் சொன்னார்’ என்றார். சென்றேன். ஆர்.எம்.வீ என் கையில் ஓர் உறை தந்தார். ‘என்ன இது?’ என்றேன். ‘நாங்கள் குறைத்த பணம் 5000’ என்றார்.  ‘நன்றி’ என்று பெற்றுக்கொண்டேன். தயாரிப்பாளர் குறைத்தாலும் தமிழ் விடாது என்று கருதிக்கொண்டேன். அந்தப் பணம் 5ஆயிரத்தை டிரஸ்ட்புரம் ஆட்டோ ரிக்‌ஷா நிறுத்தத்திற்கு அன்பளிப்பாக வழங்கினேன். “ என பதிவிட்டுள்ளார்.