வைரமுத்து ஒன்றும் துறவி இல்லை: மலேசியா வாசுதேவனின் மருமகள் ஹேமமாலினி பதிவு
பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து மீ டூ #MeToo என்ற ஹேஷ்டேகின் கீழ் பதிவிட்டு வருகிறார்கள்.
உலக அளவில் இது பிரபலமாகி வருகிறது. மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் இந்த சர்ச்சையில் சிக்கி பதவியை ராஜினாமா செய்தார்.
தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி புகார் கூறியிருந்தார். அவருக்கு ஆதரவாக மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகளான ஹேமமாலினி தனது பேஸ்புக் பக்கத்தில் சின்மயிக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
அதில்,தமிழ்த் திரையுலகம் ஏன் சின்மயிக்கு ஆதரவாக இல்லை என்பது எனக்குப் புரியவில்லை. வைரமுத்து ஒன்றும் துறவி இல்லை என்பது தமிழ் திரையுலகினருக்கு தெரியும் என்பது உறுதி. சின்மயி ஏன் இதை பத்து வருடங்களுக்கு முன் சொல்லவில்லை என்று ஏன் கேட்க வேண்டும்.
இப்போது அவர் புகார் சொல்லியுள்ளார், இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டும். நாம் ஏன் வைரமுத்துவை கேள்வி கேட்பதில்லை? சமூகம் ஏன் குற்றம் சாட்டப்பட்டவரை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவரைக் கேள்வி கேட்கிறது? என்ன ஒரு ஒருதலைப்பட்சமான துறை இது.
நான் சன் மியூசிக் சேனலில் இருந்தபோது, வைரமுத்து அங்கு வேலை செய்த ஒரு இளம் தொகுப்பாளரைத் தொடர்பு கொள்ள முயன்றதை அறிவேன். அவரைப் பற்றி பத்து வருடங்களுக்கு மேலாக பல தளங்களில் பேசியிருக்கிறேன். குரலற்றவர்களின் குரலாக ஒலித்த சின்மயிக்கு தலைவணங்குகிறேன். இந்தத் துறை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது' இவ்வாறு கூறினார்.