சாத்தான்குளம் விவகாரத்தில் இவர்களும் குற்றவாளிகள் தான்: உதயநிதியின் ஆவேச டுவீட்
சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகியோர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் இருவரும் மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அவ்வப்போது தனது கருத்தை ஆவேசமாக தெரிவித்து வரும் நிலையில் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மட்டும் குற்றவாளிகள் இல்லை என்றும், மாஜிஸ்திரேட், சிறைத்துறை அதிகாரி, மருத்துவர்கள் ஆகியோர்களும் இக்குற்றத்துக்குத் துணைபோனவர்கள் என்று டுவிட் செய்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
ஜெயராஜ், பென்னிக்ஸை கொன்றவர்கள் நேரடி குற்றவாளிகள் என்றால், அவர்களின் உடல் காயங்களை பார்த்து மருத்துவமனைக்கு பரிந்துரைக்காத மருத்துவர், அந்த காயங்களை பதிவு செய்யாத மாஜிஸ்திரேட், போலீசின் குற்ற நடவடிக்கைக்கு ஆதரவு தந்த சிறைத்துறை அதிகாரி ஆகியோரும் இக்குற்றத்துக்குத் துணைபோனவர்களே.
இவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அதற்குமுன்பாக கொலைவழக்கு பதிவுசெய்து கொலையாளிகளை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பு. மற்றபடி சஸ்பெண்ட், பணியிடமாற்றம், காத்திருப்பு பட்டியல் என்பது வெறும் கண்துடைப்பே
ட்ரோன் விட்டனர், முட்டிபோடவைத்தனர், இம்போசிஷன் எழுத வைத்தனர். அன்று சிரித்தோம். மதுரை அப்துல்ரஹீமை கொன்றனர், கோவை தள்ளுவண்டி சிறுவனை தாக்கினர். உச்சமாக ஜெயராஜ்-பென்னிக்ஸை கொன்றுள்ளனர். இன்று அழுகிறோம். தவறை முதல்புள்ளியிலேயே தடுக்க, தட்டிக்கேட்க வேண்டும்
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.