ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராகி வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் நேற்று இரவு வெளியானது.
தமிழில் எம்ஜிஆர் போல், ஆந்திராவில் என்டிஆர் என்கிற என்.டி.ராமராவ் சினிமாவில் நடித்து பெரும் புகழ் பெற்றார். தெலுங்கில் 1960 மற்றும் 70-களில் அதிக படங்களில் நடித்த அவர், தமிழில் பாதாள பைரவி, கல்யாணம் பண்ணிப்பார், வேலைக்காரி மகள், மருமகள், தெனாலிராமன், சம்பூர்ண ராமாயணம், கர்ணன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். எளிய மக்களின் நம்பிக்கை நாயகனாக தன்னை வளர்த்துக்கொண்ட என்டிஆர்,, தெலுங்கு தேசம் கட்சியை ஆரம்பித்து ஆந்திர முதல்வராக பதவி வகித்தார். இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்பட்டு வருகியுள்ளது. இதில் என்.டி.ராமராவ் வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணாவே நடித்துள்ளார். என்.டி.ராமராவ் மனைவியாக வித்யாபாலன் நடித்துள்ளார்..
நடிகர் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் மகேஷ்பாபுவும், நாகேஸ்வரராவாக சமந்தாவின் கணவர் நாகசைதன்யாவும் நடித்துள்ளனர். என்.டி.ராமராவின் இளம் வயது வாழ்க்கை சம்பவங்கள், சினிமா சாதனைகள், அரசியல் பயணம் ஆகியவற்றை இதில் காட்சிப்படுத்தி உள்ளனர். இரண்டு பாகங்களாக தயாராகிறது. அதிக பொருட்செலவில் பாலகிருஷ்ணாவே தயாரித்துள்ளார்.
என்டிஆர் படத்தின் டிரெய்லர் நேற்று இரவு வெளியானது. இதில் என்டிஆராக நடித்துள்ள பாலகிருஷ்ணாவின் நடிப்பு, நிஜ என்டிஆரை கண்முன் நிறுத்துகிறது. வித்யா பாலனின் நடிப்பு அற்புதமாக இருக்கிறது. கிருஷ்ணர் வேடத்தில் நடித்து புகழ் பெற்ற என்டிஆரை ஆந்திர மக்கள் கடவுளாக பார்த்தனர். அந்த மக்களின் வளர்ச்சியில் அவர் காட்டிய அக்கறை, அவரது சினிமா வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை எல்லாவற்றையும் படத்தில் காட்டியுள்ளது டிரெய்லரிலேயே தெரிகிறது. பாலகிருஷ்ணா தன்னுடைய அப்பா என்டிஆராகவே இப்படத்தில் வாழ்ந்துள்ளார்.