செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 மார்ச் 2020 (12:49 IST)

12 மாவட்ட தியேட்டர்கள் மூடல்: பட ரிலீஸை தள்ளிவைக்க திட்டம்!

கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழக எல்லை மாவட்டங்களில் உள்ள தியேட்டர்கள் மூடப்படுவதால் பட ரிலீஸை தள்ளி வைக்க பட நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல உயிர்களை பலி கொண்டுள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை 107 பேருக்கு கொரோனா பரவியுள்ளது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தமிழக எல்லை மாவட்டங்களான திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை மற்றும் கன்னியாக்குமரி ஆகிய 12 மாவட்டங்களில் திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மார்ச் 31 வரை இந்த மாவட்ட திரையரங்குகள் செயல்படாது என்பதால் அடுத்த இரண்டு வாரத்திற்கு வெளியாக இருக்கும் திரைப்படங்கள் பெரும் நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மார்ச் இறுதிக்கு பிறகு படங்களை வெளியிடலாமா என்பது குறித்து பட நிறுவனங்கள் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் மார்ச் மாதம் வெளியாக வேண்டிய படங்கள், ஏப்ரல் மாத படங்களுடன் இணைந்து வெளியாகும் சூழல் இருப்பதால் பெரும்பான்மையான படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.