1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 14 பிப்ரவரி 2022 (10:45 IST)

மகான் படத்தில் காந்தியத்தைக் கொச்சைப் படுத்தியுள்ளார்கள்… தமிழருவி மணியன் ஆவேசம்!

கடந்த வாரம் வெளியான மகான் படத்தில் காந்தியவாதிகள் கொச்சைப் படுத்தப் பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய திரைப்படம் மகான். காந்தியவாதி குடும்பத்தில் பிறந்து காந்திய நம்பிக்கைகள் அதிகமாகக் கொண்ட பெண்ணை மணந்துகொள்ளும் விக்ரம், ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் எந்த இன்பத்தையும் அனுபவிக்கவில்லை என நொந்துபோய் குடி சாம்ராஜ்யத்தையே தோற்றுவித்து வாழ்ந்துவருகிறார். இதனால் கோபமாகும் அவரின் குடும்பத்தினர் அவரை அழிக்க அவரின் மகனையே கோபக்கார இளைஞராக அனுப்பி வைக்கிறார்கள். அவர் விக்ரம்மை தவிர மற்ற எல்லோரையும் என்கவுண்ட்டரில் சுட்டுத் தள்ளுகிறார்.

இந்த படத்தைக் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதில் ஒன்றாக காந்தியவாதிகளின் உள்மனதில் இருக்கும் வன்முறையை இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது என ஒரு தரப்பும், மற்றொரு தரப்பு காந்தியவாதிகளை கொச்சைப் படுத்திவிட்டதாகவும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் படத்தையும், அதன் இயக்குனர் மற்றும் நடிகர் விக்ரம் ஆகியவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சமீபத்தில் அவர் புதிய தலைமுறை ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் ‘கருவாடு விற்றுப் பெற்ற பணம் நாறவா போகிறது என்று யோசிக்கப் பழகியவர்களிடம் ஒரு சமூகத்தையே புரட்டிப் போடும் பரட்சிகரமான கலைப் படைப்பையா நாம் எதிர்பார்க்க முடியும்?’ என விமர்சனம் செய்துள்ளார்.