மாண்புமிகு மாணவன் முதல் மாஸ்டர் வரை: தளபதியின் ஒரு குட்டி ரீவைண்ட்
துப்பாக்கியின் தோட்டாக்களை தன் கத்தி போன்ற பார்வையாள் தெறிக்கவிடும் வேட்டைக்காரனின் சினிமா பயணத்தை அவரது பிறந்தநாளில் பிகில் அடித்து கொண்டாட களத்தில் இறங்கி மாஸ்டர் தான் மாஸ் என்று மார்தட்டிக்கொள்கின்றனர் தளபதி வெறியன்ஸ்.
கடந்த 1974ம் ஆண்டு இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் - ஷோபா தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் ஜோசப் விஜய். இவரை எஸ்.ஏ. சி எப்படியாவது மருத்துவர் ஆக்கிவிட வேண்டும் என கனவு கண்டார். ஆனால், விஜய்யோ தான் சினமாவில் எப்படியாவது ஹீரோவாக வேண்டும் என்ற கணவில் இருந்தார். விஜயகாந்தின் வெற்றி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய்க்கு " மாண்புமிகு மாணவன்" என டைட்டில் கார்டு உடன் இவரது திரைப்பயணம் ஆரம்பித்தது.
இதையடுத்து தந்தை எஸ்.ஏ. சி, விஜய்யை ஹீரோவாக நாளைய தீர்ப்பு படத்தில் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து தோல்விகள் , அவமானங்கள், கேலி , கிண்டல் என எல்லா இன்னல்களுக்கு இடையிலும் சாதிக்கவேண்டும் என்ற வெறியுடன் வெற்றியை நோக்கி பாய்ந்த விஜய்
'பூவே உனக்காக' படத்தின் மூலம் இளைஞர்கள் கொண்டாடும் நாயகனாக விஜய்யை மாற்றினார். அதையடுத்து விஜய்யின் திரையுலக பயணத்திற்கு மைல் கல் அமைந்தது
'காதலுக்கு மரியாதை' படம்.
இதன் பின்னர் விஜய்யின் திரையுலக பயணத்தில் சின்ன சரிவு ஏற்பட்டது. இதனை எஸ்.ஜே. சூர்யாவின் குஷி சரிகட்டியது. அதைத்தொடர்ந்து இவர் நடித்த பிரியமானவளே, ப்ரண்ட்ஸ், பத்ரி போன்ற படங்கள் தொடர் ஹிட் தான். இப்படி காதல் நாயகனாகவும், ஏதார்த்த நாயகனாகவும் நடித்த கொண்டிருந்த விஜய், ‘திருமலை’ படத்தின் மூலம் ஆக்ஷன் ஹிரோவாக களம் இறங்கி வெற்றி பெற்றார். திருமலையை தொடர்ந்து இவர் ஆக்ஷன் ஹிரோவாக நடித்த ‘ கில்லி’ படம் விஜய்க்கு மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்த்தை கொடுத்தது.
அதைத்தொடர்ந்து இவர் ஆக்ஷன் பாணியில் நடித்த ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ என அனைத்து படங்களும் திரையரங்குகளில் விசில் சத்தத்தையும், வசூல் சத்தத்தையும் சிதற விட்டது. இப்படி ஆகஷ்ன் பாணியில் பயணித்த கொண்டிருந்த விஜய்யின் பயணத்தில் இன்னொரு மைல்கல்லாக அமைந்த படம் போக்கிரி. இப்படம் திரையிட்ட இடமெல்லாம் வெற்றி விழா கண்டது. இதனையடுத்து, விஜய் திரும்பவும் சரிவை நோக்கி சென்றார். இவர் நடித்த அழகிய தமிழ்மகன், வில்லு, சுறா போன்ற படங்கள் தோல்வியை சந்தித்தது. இதன்பின்னர் வெளிவந்த காவலன் விஜய்யின் திரையுலக பயணத்தை காத்தது. அதைத்தொடர்ந்து வெளிவந்த வேலாயுதம் விஜய்யை திரும்பவும் ஃபார்முக்கு கொண்டு வந்தது.
இதையடுத்து, விஜய், ஏ.ஆர். முருகதாஸுடன் 2012ம் ஆண்டு தீபாவளிக்கு தூப்பாகியுடன் களமிறங்கினார். இந்த தூப்பாக்கியில் இருந்த வெளிவந்த தோட்டாக்கள் பாக்ஸ் ஆபிஸ்ஸை சிதறவிட்டன. தமிழில் எந்திரனுக்கு அடுத்து 100 கோடி வசூல் செய்த படம் என்ற பெயரை பெற்றது தூப்பாக்கி. மீண்டும் விஜய், ஏ.ஆர். முருகதாஸுடன் இணைந்து 2014ம் ஆண்டு கத்தியுடன் தீபாவளிக்கு வேட்டைக்கு சென்றார். இந்த வேட்டையும் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ்ஸை அலற வைத்தது. இதைத்தொடர்ந்து விஜய்யின் தெறி, மெர்சல் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று அவரை தென்னிந்தியா மட்டுமல்லாமல் பாலிவுட் வரையிலும் அவரது வசூல் சாதனையை பற்றி பேச வைத்தது.
பிரச்னைகளும் ப்ரோமோஷனாக மாறக்கூடிய ஒரே ஹீரோ நம்ம தளபதி விஜய் மட்டும் தான். ஒவ்வொரு படத்தின் ரிலீஸின் போதும் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு அதுவே படத்தின் வெற்றிக்கு வழிவகை செய்துவிடும் பிகில் வெற்றியை தொடர்ந்து மாஸ்டரை கொண்டாட காத்திருக்கும் தளபதி ரசிகர்கள் இன்று அவரது பிறந்தநாளை திருவிழா போல உற்சாகத்துடன் கொண்டாடி வாழ்த்துக்கூறி வருகின்றனர்.