புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (17:29 IST)

பீஸ்ட் படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும்: தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி அறிக்கை

beast
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’  திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தை தடை செய்ய வேண்டுமென  தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் முஸ்தபா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதி, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பீஸ்ட் திரைப்படம் வெளியாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து இருப்பதாக கூறி குவைத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
 
தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து வருவதை வழக்கமாகக் கொண்டு, இஸ்லாமியர்கள் என்ற தீவிரவாதிகள் என்ற தோற்றத்தை திரைத்துறையினர் உருவாக்கிவருகின்றனர். தங்களது சாதி அடையாளம் மற்றும் சாதி தலைவர்களின் பெயர்களைக் கூட திரைப்பட கதாபாத்திரங்களில் இடம் பெற்றால் அதற்கு கடும் எதிர்ப்புகளை சமுதாய அமைப்புகள் தெரிவிப்பதைப் பார்த்துவருகிறோம். ஆனால், இஸ்லாமியர்கள் மட்டும் வெடிகுண்டு, துப்பாக்கி கலாச்சாரத்தில் ஈடுபட்டு நாட்டின் அமைதிக்கும், இறையாண்மைக்கும் எதிராக செயல்படுவது போல தொடர்ந்து திரைப்படங்களில் காட்சிகள் இடம்பெறுவது மிகவும் வேதனை அளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது.
 
2015 பெரு வெள்ளத்தின்போது இஸ்லாமிய அமைப்புகள் செய்த பணிகளை யாரும் மறந்துவிட முடியாது. கொரோனா பேரிடரில் உயிரிழந்தவர்களை சொந்தபந்தங்கள் கூட தொட மறுத்த உடல்களை, அடக்கம் செய்தவர்கள் இஸ்லாமிய அமைப்புகள். இப்படி பேரிடர் என்று வந்துவிட்டால், தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்து களத்தில் இறங்கி நிவாரண பணிகளை இஸ்லாமிய இளைஞர்கள் இன்று வரை செய்து வருவதை யாரும் மறுக்க முடியாது.
 
உண்மை நிலை இப்படி இருக்கும்போது இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக பீஸ்ட் திரைப்படத்தில் கதை இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பைக் கடைபிடித்துவருகின்றனர். இந்தச் சூழலில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ள விஜயின் பீஸ்ட் திரைப்படம் வெளிவந்தால் பிரச்னை ஏற்படும். எனவே, பீஸ்ட் திரைப்படம் வெளியிட உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தடைவிதிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்’ இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.