செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 5 ஏப்ரல் 2021 (12:48 IST)

சீமானுக்கு ஆதரவாக சிம்பு பட தயாரிப்பாளர்… முகநூலில் பிரச்சாரம்!

சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை தயாரித்து வரும் சுரேஷ் காமாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக அவர் முகநூலில் வெளியிட்டுள்ள அறிக்கை:-

ஏதேனும் புகழ் மிக்க... அல்லது ஆதாயம் தரும் கட்சிகளில் இணைந்து கொள்வதே இன்று சினிமாவில் இருப்பவர்களின் புத்திசாலித்தனமாகக் கருதப்படுகிறது. ஒன்று காசு... இரண்டாவது ஆட்சியதிகாரத் துணை. இத்தகைய லாபத்தை எதிர்பார்த்துதான் பிரச்சாரத்திற்கு புறப்பட்டவர்களிலிருந்து.. குரல் கொடுப்பவர்கள் வரை தங்கள் இணைத்துக் கொள்தலை வைத்துக் கொள்கிறார்கள்.  ஆனால், என்னைப் பொருத்தவரை ஓட்டிற்கு காசு கொடுப்பவர்கள் நிச்சயம் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களின் பக்கம் நிற்கப் போவதில்லை. கூட்டணி பேரம் செய்துகொண்டவர்கள் வென்ற பின், கூட்டாகக் கொள்ளையடிப்பதைத் தவிர வேறெதுவும் செய்யப் போவதில்லை. சாதி மத பேதத்தோடு சீட்டு கொடுத்து வேட்பாளர்களை நிற்க வைத்தவர்களால் எப்படி சாதி மத மறுப்பைக் கொண்டுவந்து சமத்துவத்தை உண்டு பண்ண முடியும்?

ஏற்கெனவே நமக்கு செய்யப்பட்ட துரோகங்களை மீண்டும் செய்யமாட்டார்கள் என்ற எந்த நம்பிக்கையை வைத்துக் கொண்டு பெருங்கட்சிகளென சொல்லிக் கொள்பவர்களை ஆதரிக்க முடியும்..? பெருங்கட்சிகளின் இந்த நிலைதான் நமக்கு அவர்கள் மேல் பற்றுகொள்வதை தடுக்கிறது.  கூட்டணியின்றி... பண விநியோகமின்றி... மக்களை மட்டுமே நம்பி ... 50% பெண்களுக்குத் தந்து, சாதி மத பேதமற்று, பொதுத் தொகுதியில் இதுவரை அரசியல் கட்சிகள் செய்யாத புரட்சியை முன்னோடியாய் செய்து நிற்கும் கட்சியே எனக்குப் புகழ் மிக்க, பெருங்கட்சியாகத் தெரிகிறது.

234 தொகுதிகளில் 117 தொகுதிகளில் பெண்கள் வேட்பாளர்கள். அடுக்களையில் அடக்கி வைத்த நம் சகோதரிகள். வேட்பாளர்கள்.  ஓட்டுக்குப் பணம் இல்லை. கல்வி, மருத்துவம், நல்ல குடிநீர், மின்சாரம் தவிர வேறெந்த இலவசமும் இல்லை. இயற்கை, மண் , மரம், செடி, கொடி, உயிர்கள், புழு, பூச்சி இவைகளுக்கான இந்தப் பூமிக்கான கனவுகள் என நிற்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சியாக உள்ளது. நேர்மையான அரசியல் வருமா என ஒவ்வொரு ஐந்தாண்டும் ஆதங்கப்படுகிறோம். ஆனாலும், நமது பலவீனம் ஒன்று அந்தக் கட்சி இல்லையேல் இந்தக் கட்சி என மாற்றி மாற்றி ஓட்டுப் போட்டுவிட்டு நல்லது நடக்குமென்று ஆசைப்பட்டிருக்கிறோம் ஐம்பது ஆண்டுகளாக. இந்த முறையும் அப்படித்தான் மாற்றம் என்று வாக்குச் சாவடி செல்வோம். அது மாற்றமல்ல. உன் சவக்கிடங்கை இன்னொரு ஐந்தாண்டிற்காகப் புதுப்பித்துக் கொள்கிறாய் என்றே எடுத்துக் கொள். வெள்ளையடிக்கப் பட்ட கல்லறையாகத்தான் அது இருக்கும்.

கொள்கைகள் ஒன்றும் மாற்றமிருக்கப் போவதில்லை. கொள்ளையின் வழிமுறை வேண்டுமானால் கொஞ்சமே கொஞ்சமாக மாறுபடலாம். வேறெந்த மாற்றமும் நம்மினத்திற்கும், மண்ணிற்கும் ஏற்படப் போவதில்லை. அதனால் உண்மையான மாற்றம் தேவையென்றால் மக்களை மட்டுமே நம்பி, நேர்மையாகக் களத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சி மட்டுமே நாம் ஆதரிக்க ஏற்ற சரியான கட்சி.  ஒருமுறை உங்கள் ஓட்டை மாற்றிப் போட்டு வெல்ல வையுங்கள் விவசாயியை. அப்புறம் நமக்கான அரசியலை நாமே செய்துகொள்ளலாம். செய்வீர்கள் என நம்புகிறேன். நன்றி
- சுரேஷ் காமாட்சி
தயாரிப்பாளர்/இயக்குநர்.