1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 21 அக்டோபர் 2018 (16:45 IST)

மீ டூ விவகரம் ; பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டி : எச்சரித்த சித்தார்த்

தமிழ் சினிமாவில் நடிகர்கள், நடிகைகள் எப்போதும் அப்படித்தான் என காமெடி நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
இதுவரை எந்த புகாரில் சிக்காத கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியது தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரைத் தொடர்ந்து வேறு சில பெண்களும் வைரமுத்து தங்களிடம் தவறாக நடந்து கொண்டார் என தொடர்ந்து புகார் கூறியது மேலும் அதிர்ச்சியை கொடுத்தது. என்  மீது தவறிருந்தால் வழக்கு தொடுக்கலாம். காத்திருக்கிறேன் என வைரமுத்து கூறிவிட்டார். 
 
அதேபோல், திரைத்துறையை சார்ந்த பல பிரபலங்கள் மீதும் பல பெண்கள் பாலியல் புகார்களை தொடர்ந்து கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு இணையதளத்திற்கு பேட்டியளித்த நடிகர் பயில்வான் ரங்கநாதன் “இங்கு யாரும் உத்தமர்கள் இல்லை. வாய்ப்புக்காக நடிகைகள் அதை ஒத்துக்கொள்கின்றனர். இது இங்கு பெரிய விஷயமே இல்லை. நடிகர்களும் அப்படித்தான். நடிகைக்கு கிடைக்கும் வாய்ப்புக்கு பின்னால் பல காரணங்கள் இருக்கிறது. சின்மயிக்கு தற்போது வாய்ப்பில்லை. எனவேதான், இப்படி புகார் கொடுத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ந்து பாடுவதற்கான காரணங்கள் அனைவருக்கும் தெரியும்” என்கிற ரீதியில் பேட்டி கொடுத்திருந்தார்.
 
இதற்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்சினிமா மற்றும் நடிகர், நடிகைகளை அவர் கொச்சைப்படுத்தியுள்ளார். இதை ஏற்கவே முடியாது. அவர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் நான் அங்கிருந்து வெளியேறுவேன். பி.ஆர்.ஓக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் என காட்டமாக டிவிட் செய்துள்ளார்.